2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அஷ்ரப் வைத்தியசாலையில் ஆலயம் அமைக்க தடையாக இருக்கக்கூடாது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 23 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

தமிழ் மக்களின் கலாசாரத்தை  பேணும் முகமாக கல்முனை தெற்கு அஷ்ரப் வைத்தியசாலைக்குள் இந்து ஆலயம் அமைப்பதற்கு வைத்தியசாலை பொறுப்பதிகாரி தடையாக இருக்கக்கூடாது என கல்முனை மாநகரசபை உறப்பினர் ஏ.விஜயரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழ், முஸ்லிம் உறவு தற்போது முன்னேற்றம் கண்டுவரும் வேளையில் நீதி நியாயத்தை மதிக்காதவர்கள் தமிழ், முஸ்லிம் உறவை சீரழிக்க செயற்படுவதாக கூறும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும்.  தமிழ் மக்களின் காலாசாரத்தினை மதித்து அஷ்ரப் வைத்தியசாலைக்குள் இந்து ஆலயம் அமைப்பதற்க தடையாக இருப்பது யார் நீங்கள்தானே. இது தமிழ்,முஸ்லிம் உறவை சீரழிக்கும் ஒரு செயற்பாடாகும்.

இதற்கு காரணமாக இருக்கும் நீங்கள் தமிழ், முஸ்லிம் உறவைப் பற்றிப் பேசுவது பொருத்தமானதல்ல அதேவேளை இன ஐக்கியம் பற்றிப் பேசும் நீங்கள் தங்களின் வைத்தியசாலைக்கு தமிழ் நோயாளர்களும் வருகின்றனர் அதேபோன்று கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு முஸ்லிம் மக்களும் செல்லுகின்றனர் அதனைக் கருத்தில் கொண்டும் முஸ்லிம்களின் கலாசாரத்தினை மதித்தும் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு இருப்பதுபோல் உங்களின் காலத்தில் கல்முனை தெற்கு வைத்தியசாலையில் இந்து ஆலயம் அமைக்க நடவடிக்கை  மேற்கொள்ளவேண்டும்

அதேவேளை, பூர்வீகமாக தமிழ் மக்கள் கல்முனையில் வாழுகின்றனர். அவர்களுக்கு ஒரு தனியான பிரதேச செயலகம் தேவை. அந்தப் பிரதேச செயலகத்தை தரமுயத்துவதற்கு முஸ்லிம் தலைமைகள் தடையாக இருப்பது வேதனை தரும் விடயமாகும். ஆனால் தமிழ்த்தரப்பு முஸ்லிம்;களுக்கு தனியான பிரதேச செயலாகத்திற்கோ தனியான கல்வி வலயம் வழங்குவதில் தமிழர்கள் தடையாக இருக்கவில்லை. அப்படியானால் மிகவும் குறைவான வீதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்;கள் வாழுகின்றனர். அவர்களுக்கு தனியான கல்வி வலயம் பிரதேச செயலகம் வழங்கவில்லையா இதற்கு தமிழ்த்தரப்பு தடையாக இருந்ததும் இல்லை இதனைப் பற்றி அறியாத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி கல்முனைக்கு தனியான பிரதேச செயலகம் கேட்டுப் போராடுவது நியாயமற்றது என்ற கூற்றைப் பார்க்கின்றபோது வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியின் இனவாதப்போக்கு தெளிவாகின்றது

கல்முனையில் பலகடைத்தொகுதிகள் பயங்கரவாத்தினால் முஸ்லிம்கள் விட்டுச்சென்றதாக தெரிவித்து இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது கல்முனைப்பகுதி தமிழர்களின் பூர்வீகம் இதனை தங்களுடையது நாங்கள்தான் விகிதாசாரத்தில் அதிகம் உள்ளவர்கள் என கூறி தமிழர்களின் பூர்வீக இடங்களுக்கு பெயர் மாற்றி வருகின்றனர். அதாவது கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் தமிழர்களின் இரண்டு  கிராமசேவகர் பிரிவை பிரித்தெடுத்தனர். கடந்த சுனாமியின்போது பாதிக்கப்பட்ட  மக்களுக்கு வெளிநாட்டில் வாழும் தமிழர் ஒருவரால் வழங்கப்பட்ட நிதியினால் கட்டப்பட்ட வீட்டுத்தொகுதி கல்முனைத் தமிழர்களுக்கு வழங்காது வேறுபிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு வழங்கிய வரலாறும் உண்டு' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X