2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

'குற்றத்துக்கு தண்டனையும் சாதனைக்கு பாராட்டும் வழங்கப்படவேண்டும்'

Gavitha   / 2015 ஜூலை 05 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

குற்றஞ்செய்கின்ற போது மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சாதனைகள் செய்யும் போது அவர்கள் பாராட்டப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே சிறந்தவொரு மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.

கடந்த வருடம் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்டத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைக்கிடையில் நடத்தப்பட்ட சைவசமயப் பரீட்சையில் சித்தியடைந்து, முதல் மூன்று இடங்களையும்  பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற கட்டடத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறுவர் உரிமைச்சட்டங்கள் அவர்களை பாதுகாப்பதற்காக  உருவாக்கப்பட்டதே தவிர, அதனை தவறாக பயன்படுத்துவதற்கல்ல. பாடசாலைகளில் மாணவர்கள் தவறு செய்கின்றபோது, ஆசிரியர்கள் தண்டிக்கின்றனர். ஆனால் அத்தண்டனையை சிறுவர் உரிமைச்சட்டங்கள் என்ற போர்வையில் கையாளும் சிலர் தவறாக ஆசிரியருக்கெதிராக திருப்ப முனைகின்றனர்.

இந்நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும். மேலைத்தேய நாடுகளில் உருவாக்கப்பட்ட இச்சட்டம், எமது நாடுகளிலும் ஊடுருவி சிறுவர்களின் சீரழிவுக்கு காரணமாக அமைகின்றன. அவ்வாறான செயற்பாடுகளே இன்று அதிகளவில் அரங்கேறுகின்றன.

குருவுக்கு மரியாதை செலுத்துகின்ற மாணவ சமுதாயம் இன்று மறைந்து செல்கின்றது. இதற்கு பெற்றோர்களும் காரணமாக அமைகின்றனர். பிள்ளைகளை பெற்றெடுப்பதுடன் பெற்றோர்களின் கடமை நின்றுவிடுவதில்லை. பிள்ளைகளை நல்வழிப்படுத்தி நற்பிரஜையாக வளர்த்தெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பரீட்சையை மையமாக கொண்ட கல்விமுறை மாற்றம் பெற்று நல்ல விழுமியங்கள் உள்ள மாணவ சமுதாயம் உருவாக்கும் கல்வி முறை பின்பற்றப்படவேண்டும். அவ்வாறான  அறநெறிக்கல்வியை போதிக்கும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் போன்ற அமைப்புக்களை பாராட்டவேண்டும் என்றார்.

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் உதாரண நாணயக்கார, மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் எஸ். கனகரெத்தினம், மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X