2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அனர்த்தம் குறித்த அறிவு இல்லாமையே உயிரிழப்புக்கு காரணம்

Sudharshini   / 2015 நவம்பர் 14 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்;தினால் இப்பிரதேசமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்து. இதனால் பெரும்தொகையான மாணவர்களும் ஏனையோரும் உயிரிழந்தனர். அனர்த்தம் தொடர்பான அறிவு இல்லாததன்  காரணமாகவே  இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தெரிவித்தார்.

கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்  மருதமுனை அல்மதீனா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அனர்த்த பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு, பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நேற்று (13) நடைபெற்றது. இதில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு  தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'இயற்கை அனர்த்தம் குறித்து  மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் பாடசாலை மட்டத்தில் இவ்வாறான கருத்தரங்குகளை நடத்தி மாணவர்களை விழிப்பூட்டும் திட்டத்தை  நடைமுறைப்படுத்துகின்றோம்.

அனர்த்தங்கள் என்று சொல்கின்ற போது சுனாமி, நிலநடுக்கம், மழை வெள்ளம், இடி, மின்னல், மண்சரிவு போன்ற பல இயற்கை அனர்த்தங்களை  குறிப்பிடலாம். இவ்வாறான அனர்த்தங்களின் போது அதிகமாக பாதிக்கப்டுவது சிறுவர்கள்; கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆகவே மாணவர்களாகிய நீங்கள் இங்கு வந்திருக்கின்ற  வளவாளர்கள் சொல்கின்ற விடயங்களை கவனமாகக்கேட்டு அவற்றை பெற்றோர்களுக்கும் ஏனையவர்களுக்கும் கூற வேண்டும்' என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாணவர்களிடம் கேட்கப்பட்ட பொது அறிவுக்கேள்விகளுக்கு விடையளித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

கல்முனை பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.நபாயிசின்  நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் அதிபர் ஏ.ஆர்.நிர்;மத்துல்லா, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி இணைப்பாளர் ஏ.சி வாஹிர், மருதமுனை நற்பிட்டிமுனை திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜனாபா சரிபா சாஜஹான், உளவளத்துணை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.தஹ்லான், கிராம உத்தியோகத்தர் ஐ.எம்.பஹ்ஜத், சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாயுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .