2025 மே 19, திங்கட்கிழமை

அம்பாறைக்கான அரசாங்க அதிபராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான  அரசாங்கம் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்குமாறு கல்முனை அபிவிருத்திப் போரத்தின் தலைவர் ஏ.பி.எம்.அஸ்ஹர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றபோதே, அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

மூவின மக்களும் ஒன்றிணைந்து வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில் மொழி அமுலாக்கல் கொள்கை சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. தற்போது இம்மாவட்டத்தில் 20 பிரதேச செயலகங்கள் உள்ளன. அதில் 13 பிரதேச செயலகங்கள் தமிழ் பேசுகின்ற மக்களின் பிரதேசங்களில் உள்ளன. இதன் தலைமைக் காரியாலயமான அரசாங்க அதிபர் அலுவலகம் அம்பாறை நகரில் உள்ளது. இதனால், கரையோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்' என்றார்.   

'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க அதிபர்கள் உள்ளனர். ஆனால், முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஓர் அரசாங்க அதிபர் கூட இல்லை. அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான கரையோர மாவட்டம் ஸ்தாபிக்கப்படும்வரை அரசாங்கம் தனது நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அம்பாறை மாவட்டத்துக்கு அரசாங்க அதிபராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். இதற்கு இந்த ஆணைக்குழு சிபாரிசு செய்ய வேண்டும். அத்துடன், இம்மாவட்டத்தில் அரச கருமங்கள் தமிழ்மொழியில் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும' எனவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X