2024 மே 09, வியாழக்கிழமை

அம்பாறையில் வெள்ள அபாயம்

Freelancer   / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம் அஸ்லம் 

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், மருதமுனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை போன்ற பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (18) முற்பகல் தொடக்கம், இப்பிரதேசங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, சில இடங்களில் வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. சாய்ந்தமருது, பொலிவேரியன் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இங்கிருந்து வெள்ள நீரை அகற்றுவதற்காக, அப்பகுதியிலுள்ள பெரிய வாய்க்கால்கள் தோண்டப்பட்டு வருகின்றன.

அதேவேளை, கல்முனையையும் கொலனிப் பகுதிகளையும் இணைக்கும் கிட்டங்கிப்பால வீதி மற்றும் கல்முனை- அம்பாறை நெடுஞ்சாலையிலுள்ள மாவடிப்பள்ளி பாலம் என்பவற்றுக்கு மேலாக வெள்ளம் பாய்ந்தோடுவதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்காக தேவையேற்படின் சாய்ந்தமருது பிரதான முகத்துவாரம் உட்பட கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு மாநகர மேயர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன் ஏலவே துப்பரவு செய்யப்பட்டு, மீண்டும் குப்பைகளினாலும் மண் திட்டுகளினாலும் அடைபட்டுள்ள வடிகான்கள் துரிதமாக சீர்செய்யப்பட்டு வருவதுடன் குறுக்கு வீதிகளிலும் சிறிய ஒழுங்கைகளிலும் அமைந்துள்ள வீடு, வளவுகளில் இருந்து வெளியேற முடியாதிருக்கின்ற வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X