2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

’இறுக்கமான நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்’

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.ஷினாஸ்

 
அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் ஊரடங்குச் சட்டம் அமலில் இருப்பது போன்று இறுக்கமான நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போதே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு உரையாற்றிய அவர்,

“ஒலுவில் துறைமுகப் பகுதியில் கடற்படையினரின் கண்காணிப்பில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு ஜாஎல பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களில் 23 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது, 03 பேருக்கு கொவிட் -19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மூன்று பேரும் இரணவில பராமரிப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

“அக்கரைப்பற்றில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான இரண்டு நபர்களுடன் நேரடித் தொடர்பு வைத்த 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதி முடக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமலில் இருக்கும்.

“பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் பொதுச் சுகாதார பழக்கவழக்கங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் வரவேண்டும்.

“கொரோனா தொற்று இல்லாத காலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கியுள்ளோம். ஆனால் தற்போது பொதுமக்கள் பீதிக்குள்ளாகியிருக்கிறார்கள். வைத்தியசாலைக்கு வருவதற்குப் பயப்படுகிறார்கள். உண்மையில் அவ்வாறில்லை. 24 மணி நேரமும் உங்களுக்காக வைத்தியசாலைகள் திறந்திருக்கின்றன. ஏதோ ஒருவிதத்தில் வைத்தியசாலைகளை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும். கிளினிக் வருபவர்களுக்குரிய மருந்து மற்றும் மாத்திரைகளை வீடுகளுக்கே கொண்டு கொடுப்பதற்கான பணிகளையும் முன்னெடுத்துள்ளோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X