2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலவச வவுச்சர்களுக்கு பதில் பணம் பெறும் பெற்றோர்

பைஷல் இஸ்மாயில்   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தின் பல பி​ரதேசங்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சீருடை மற்றும் இலவச பாதணிகளுக்கான வவுச்சர்களைக் கடைகளில் கொடுத்து, அவற்றுக்குப் பதிலாக பணம் கேட்டு சில பெற்றோர்கள் தொல்லை கொடுப்பதாக, வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சீருடை, பாதணிகள் ஆகியவற்றுக்கான வவுச்சர்களைத் துணிக்கடை மற்றும் பாதணி விற்பனை நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் பெற்றோர்கள் சிலர், அவற்றுக்குப் பதிலாக பணத்தை வழங்குமாறும் கேட்டு வருகின்றனர்.  

இதேவேளை, 550 ரூபாய் சீருடைகளுக்கான பண வவுச்சருக்குப் பதிலாக 400 ரூபாயும், 1,400 ரூபாய் பாதணிகளுக்கான வவுச்சருக்கு 1,000 ரூபாயும் கேட்டு சில பெற்றோர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

சீருடைக் கூப்பன் மூலம் வருடப் பிறப்புக்கென ஆடம்பரமான ஆடைகளையும் கொள்வனவு செய்கின்றனர். ஒரு வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தால் ஒருவருக்கு மாத்திரமே சீருடைக்கான துணியைக் கொள்வனவு செய்து விட்டு, மிகுதிக் கூப்பன் மூலம் வீட்டுப்பொருட்களையும் கொள்வனவு செய்தும் வருகின்றனர்.

இதைவிட ஒரு சில பெற்றோர்கள், மதுபானசாலைகளுக்குக் கொண்டு சென்று மதுபானம் அருந்தும் நிலைமையும் தோன்றியுள்ளதாக, சில தாய்மார்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் கல்விக்காக மாணவர்களுக்குச் செய்துவரும் இலவசக் கொடுப்பனவுகளையும், சலுகைகளையும் இவ்வாறு சில பெற்றோர்கள் மிகப் பிழையாக பயன்படுத்தி வருவதால், ஏனைய பெற்றோர்களுக்கு இது அவப் பெயரை இட்டுக்கொடுப்பதாகவும்,  இவ்விடயங்களைக் கவனிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வியாபாரிகள் இவ்வாறு இலவச கூப்பன்களை தந்து பணம் கேட்பவர்களுக்கு துணைபோகாது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .