2024 மே 09, வியாழக்கிழமை

இல்மனைட் அகழ்வுக்கு அனுமதி வழங்கல் ஆராய்வு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல், திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று (07) நடைபெற்றது.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் ஒழுங்கமைப்பில், அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.எல்.டக்ளஸுன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 3 கிலோமீற்றர் தூரத்துக்கு இல்மனைட் அகழ்வுகள் மேற்கொள்வதற்கான முன்னாய்த்த பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், இல்மனைட் அகழ்வுக்கான அனுமதிகள் வழங்குவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.

இல்மனைட் அகழ்வுப் பணிகளுக்காக கரையோர பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களம் என்பன தமது சம்மதங்களைத் தெரிவித்துள்ள போதும், திருக்கோவில் பிரதேச சபை, திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகத்தின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இங்கு ஆராயப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் 50 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு இலாபமாக கிடைக்கவுள்ளதுடன், இப்பிரதேசத்தில் பல்வேறு பாரிய பௌதிக ரீதியான அபிவிருத்தி பணிகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான அனுமதிகள் வழங்குவது தொடர்பாக பொதுமக்களை விழிப்புணர்வு செய்வதோடு, ஒரு கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைக்கவுள்ளதாகவும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்து திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்  இல்மனைட் அகழ்வுக்கு அனுமதி வழங்க முடியாது என தமது தீர்மானத்தை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இல்மனைட் அகழ்வுக்கு சார்பாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு, இறுதித் தீர்மானம் ஏதும் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவுற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .