2024 மே 20, திங்கட்கிழமை

கட்டுப்பாட்டு விலை அமுல் இழுபறிக்கு தீர்வு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பதில் நிலவி வந்த இழுபறி நிலைக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று (14) அனைத்து மாட்டிறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு, வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் மாடு விநியோகஸ்தர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் இத்தீர்வு எட்டப்பட்டதாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாட்டிறைச்சியின் விலை முறையற்ற விதத்தில் அதிகரிக்கப்பட்டிருப்பதால், மக்கள் அதனைக் கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதை கருத்தில்கொண்டு, 01 கிலோகிராம் மாட்டிறைச்சி (200 கிராம்  எலும்பு அடங்கலாக) 1,600 ரூபாய்க்கும் தனி இறைச்சி 1,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என மேயரால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும், கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்துவதில் மாநகர சபைக்கும் இறைச்சிக் கடைக்காரர்களுக்குமிடையே இழுபறி காணப்பட்டு வந்தது.

இதனால் பெரும்பாலான இறைச்சிக்கடைகள் கடந்த 06ஆம் திகதி முதல் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் நுகர்வோர் மாட்டிறைச்சியை கொள்வனவு செய்ய முடியாமல் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இந்நிலையில், மாட்டிறைச்சி வியாபாரிகளையும் மாடு விநியோகஸ்தர்களையும் மாநகர சபைக்கு அழைத்து, மேயர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களையடுத்து 01 கிலோகிராம் மாட்டிறைச்சி (200 கிராம் எலும்பு அடங்கலாக) 1,700 ரூபாய்க்கும் தனி இறைச்சி 1,900 ரூபாய்க்கும் விற்பனை செய்வதற்கு இணக்கம் காணப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X