2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கல்விச் சுற்றுலாவுக்கு 3 வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு கண்டனம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 01 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாணத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு உலக வங்கியின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவில் பங்கேற்க மூன்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு மாகாண ஆளுநரினால் அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இது தொடர்பில் அச்சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இம்மாதம் 12ஆம் திகதி முதல் இரு வாரங்களுக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து 30 பேர் கொண்ட குழு தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ளது.

இந்தச் சுற்றுலாவில் கலந்துகொள்வதற்காக சிபாரிசு  செய்யப்பட்ட மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா ஆகிய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ மறுத்துள்ளமை அநீதியாகும். அவர்கள் மூவரும் அடுத்த சில மாதங்களில் ஓய்வுபெறவுள்ளமையே இதற்கான காரணமாக கூறப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.

'கல்விச் செயற்பாட்டுக்காக 30 வருடங்களுக்கும் மேலாக தங்களை அர்ப்பணித்த இம்மூவரும்; ஓய்வுபெறவுள்ள இறுதிக் காலத்தில் கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தை  வழங்குவதற்கு கிழக்கு மாகாண சபை நிர்வாகத்துக்கு மனமில்லாமல் போனமை கவலைக்குரியது.

2003ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த வேளையில், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்தியாவுக்கான இரு வாரகால கல்விச் சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, ஓய்வுபெறுவதற்கு ஓரிரு மாதங்களே இருந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அப்போதைய மாகாண ஆளுநர் அதற்கான வாய்ப்பை வழங்கியமையை இந்தச் சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்துகிறோம்' என்றார்.  

'மேலும், மேற்படி மூன்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் கல்விச் சுற்றுலாவுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள இருவருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றாத சிலருக்கும் இதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று எமது சங்கம் கேட்டுக்கொள்கின்றது' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X