2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கல்முனை பஸ் நிலையத்தில் முறுகல்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் அரச மற்றும் தனியார் பஸ் நடத்துநர்களிடையே, இன்று (03) மதியம் ஏற்பட்ட முறுகல் நிலை, கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் தலையீட்டால் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் தரித்து நிற்பதற்கு இடமளிக்க மறுத்து, இ.போ.ச.பஸ் நடத்துநர்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இரு தரப்பினரிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இந்தச் சர்ச்சை குறித்து கல்முனை மாநகர மேயரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த மேயர், தனியார் பஸ்களைத் தரித்து வைப்பதற்கான இடங்களை அடையாளப்படுத்தி, ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.

இதன்பிரகாரம், குறித்த பஸ் நிலையத்தின் பின் பகுதி, தென் பகுதி ஓரம், தீயணைப்புப் பிரிவு சுற்று வட்டாரம் ஆகிய பகுதிகள், தனியார் பஸ்களுக்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பஸ் நிலையத்தின் முன் பகுதி வட-கிழக்கு மூலையில் பயண நேரத்துக்குப் புறப்படத் தயாராகும் இரு தரப்பு பஸ்களையும் தரித்து வைப்பதற்கு இடமளிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை மேயர் அறிவுறுத்தினார்.

பயணிகளின் நலன் கருதி கல்முனை பஸ் நிலையத்தை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளுக்கு இரு தரப்பினரும் மாநகர சபைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றும் மாநகர முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

தனியார் பஸ்களுக்கு கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் தற்போது போதிய இடங்கள் ஒதுக்கித் தரப்பட்டிருப்பதனால் இனிவரும் காலங்களில் பொலிஸ் நிலைய வீதி நெடுகிலும் தனியார் பஸ்கள் நிறுத்தப்படுவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று பணிப்புரை விடுத்த மாநகர முதல்வர், இந்த ஒழுங்கு விதியை மீறுவோர் மீது அபராதம் விதிக்குமாறு பொலிஸாரை அறிவுறுத்தினார்.

அதேவேளை ஓட்டோக்களுக்கு பஸ் நிலையத்தின் தென்கிழக்கு மூலைப்பகுதியில் இடமொதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்புதிய ஒழுங்கு விதிகளுக்கேற்ப அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்து, வழிநடாத்தும் பணியில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X