2025 மே 05, திங்கட்கிழமை

கல்முனைப் பிராந்தியத்தில் குப்பைகளில் மின்சார உற்பத்தி

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 மார்ச் 26 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனைப் பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு, மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு கொரிய நாட்டின் முன்னணி பொறியியல், தொழில்நுட்ப நிறுவனமொன்று முன்வந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தூதுக்குழுவினர், நேற்று (25) மாலை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபை சந்தித்துக் கலந்துரையாடியபோதே, இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

நல்லாட்சிக்கான புத்தாக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் தினசரி 80 தொன் குப்பைகள் சேகரித்து அகற்றப்படுவதாகத் தெரிவித்த மேயர், அதற்கான செயற்பாடுகள், செலவீனங்கள் தொடர்பில் மேற்படி நிறுவனத்தின் தூதுக்குழுவினருக்கு விவரித்துக் கூறினார்.

இதனையடுத்து, கல்முனை பகுதியில் அன்றாடம் சேர்கின்ற குப்பைகளைக் கொண்டு, மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கான திட்டத்துக்கு முதலீடு செய்வதற்கு, தமது நிறுவனம் தயாராக இருக்கிறது என்று தெரிவித்த தூதுக்குழுவினர், இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 20 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தரப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.

கல்முனையில் பாரிய நிலத்தட்டுப்பாடு காணப்படுவதால், இப்பாரிய நிலப்பரப்பைப் பெற்றுக்கொள்வதென்பது பெரும் சவாலான விடயமென,  சுட்டிக்காட்டிய மேயர், இதற்கு மாற்று வழிகள் குறித்துப் பரிசீலிக்க முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியமான பொறிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இணக்கம் தெரிவித்த கொரிய நிறுவனக் குழுவினர், தமது உத்தேச மின்சார உற்பத்தித் திட்டம் தொடர்பிலான நகல் வரைபை, மேயரிடம் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X