2025 மே 08, வியாழக்கிழமை

காணிகளை விடுவிக்குமாறு மகஜர் கையளிப்பு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்தில் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை, நல்லாட்சி அரசாங்கம் விரைவில் நல்லிணக்க அடிப்படையில் விடுவித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் காணி மீட்பு பேரவையால் இன்று (29) மகஜர் கையளிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்ட காணி மீட்புப் பேரவை, காணி உரிமையாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

காணிகளை இழந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் கே.இஸ்ஸடீன் தலைமையிலான இம்மகஜரைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குறித்த மகஜருடன், மாவட்டத்தில் காணிகளை இழந்தவர்கள் தொடர்பான விடயங்கள் அடங்கிய ஆவண தொகுப்பு ஒன்றையும் மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸனிடம் கையளித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் அஸ்ரப் நகர், பாணம, ராகம்வெளி, சாஸ்திர வெளி, பள்ளியடிவட்டை, ஒலுவில், நுரைச்சோலை உள்ளிட்ட பல இடங்களில் மக்களின் காணிகள் தற்போது வரை அபகரிக்கப்பட்ட நிலையில், இக்காணிகளை விடுவிக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் பல வருடங்களாகப் போராடி  வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த மகஜரை பெற்று கொண்ட மேலதிக அரசாங்க அதிபர்  ஜெகதீஸன், மக்களின் கோரிக்கை நியாயமானது. எனவே இவ் மகஜர் மற்றும் மக்களின் காணி தொடர்பான கோரிக்கைகளை அரசாங்க அதிபரிடம் எடுத்துக் கூறுவதுடன், ஜனாதிபதி மற்றும் உரிய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு  அனுப்பி வைப்பதாகவும், மாவட்ட செயலகம் சார்பாக காணி விடுவிப்பு சம்மந்தமாக மேற்கொள்ள வேண்டிய விடையங்களை மேற்கொண்டு தருவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X