2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’கூட்டமைப்பினர் மக்களை குழப்புகின்றனர்’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

தேவையற்ற பிரசாரங்களை மேற்கொண்டு, மக்களைக் குழப்புகின்ற செயற்பாட்டில் கூட்டமைப்பினர் ஈடுபட்டிருக்கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பிரதமரின் விசேட இணைப்புச்  செயலாளரும்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

அபிவிருத்தி தொடர்பில் அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று (22) மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் கல்முனையில் இரவு நடைபெற்ற  விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிளோர் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஏனென்றால், பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கும் தயார்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களைக் குழப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இவ்விடயத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள். கூட்டமைப்பின் செல்வாக்கு சரிவடைந்து வருகின்றது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதை கட்டியெழுப்புவதற்காக வெறும் கோஷங்களை தூண்டி, மக்களை உணர்ச்சி வசப்படுத்தி மாற்றங்களை உருவாக்கலாம் என கனவு கண்டுகொண்டிருக்கின்றார்கள். அது நிறைவேறப்போவதில்லை.

“ஏனெனில், மக்களுக்குத் தேவையான விடயங்கள் என்னவென்று மக்களுக்கு நன்கு தெரியும். இதனடிப்படையில் தான் எனக்கு அம்பாறை மாவட்ட மக்கள் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளார்கள். இதேபோன்று தான் ஏனைய பிரதேசங்களிலும் கூட்டமைப்பினருக்கு சரிவு ஏற்பட்டிருந்தது. 

“இதை நிவர்த்தி செய்வதற்காக வெறுமையான  திட்டங்களையும் வெற்றுக் கோஷங்களையும் மக்கள் மத்தியில் உருவாக்கி, துண்டுகின்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள். இவர்களது செயற்பாடுகளை மக்கள் கண்டுகொண்டதாக நான் அறியவில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .