2025 மே 12, திங்கட்கிழமை

‘கூட்டமைப்புதான் தமிழருக்குப் பிரச்சினை’

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, ரீ.கே.றஹ்மத்துல்லா

தமிழ் மக்களது பிரச்சினைகளையும் தேவைகளையும், ஓரளவேனும் தீர்க்கலாமென்று எண்ணியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தான் இணைந்து எம்.பியானதாகக் கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான், தமிழ் மக்களுக்குப் பிரச்சினையாக உள்ளதென்பதைப் பின்னர் உணர்ந்கொண்டதால், அங்கிருந்து வெளியேறிதாகவும் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள அவரது பணிமனையில், இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “இந்நாட்டில் எப்போது, இனத்துக்கென்று கட்சிகள் உருவாகினவோ, அன்றிலிருந்தே பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின. அது மட்டுமல்லாமல், இன நல்லிணக்கத்துக்கும் சமாதானத்துக்கும் கூட, அவையே குந்தகமாக இருந்தன” என்றார்.

இன்று கூட, தமிழ், முஸ்லிம் தலைமைகள், மக்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்கின்றனரென்றும் குற்றஞ்சாட்டிய அவர், 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, கூட்டமைப்பினர் என்ன செய்தன​ரெனக் கேள்வியெழுப்பினார்.

தவறான தலைவர்களின் தவறான முடிவுகளாலேயே, தமிழ், முஸ்லிம் மக்கள் இன்று அநாதைகளாக நிற்கின்றனர் எனவும் தமிழ்ச் சமூகத்திலுள்ள அதிகளவான இளைஞர், யுவதிகள், தொழில் வாய்ப்புகளின்றி இருக்கின்ற நிலைமை மேலும் தொடரக் கூடாதெனவும் கூறினார்.

மேலும், “தமிழ் மக்கள், தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், தமக்கானவற்றைப் பெற்று, செழிப்பான வாழ்வை வாழ வேண்டுமானால், தற்போது ஆட்சியிலுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் தலைமைகளுடன் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும்” என்றும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X