2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’கொரோனா தடுப்புக்கு ஒத்துழைப்பு போதாது’

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனைப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு போதியளவு கிடைப்பதில்லை என  கவலை தெரிவித்துள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி, கொரோனா  அபாயத்தை உணர்ந்து,  இயன்றளவு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென  வலியுறுத்தியுள்ளார்.

கொத்து கொத்தாக கொரோனா தொற்று பரவியதன் பின்னர் எம்மால் எதுவும் செய்ய முடியாது போகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இது விடயமாக இன்று (29) அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “தற்போது அக்கரைப்பற்று பிரதேசம் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு கொரோனா கொத்தணியாக விஸ்பரூபம் எடுத்து வருகின்றது. அது எமது கல்முனை பிராந்தியத்திலுள்ள ஒரு பகுதி என்பதால், இவ்விரு பிரதேசங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் கல்முனைப் பிரதேச மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். 

“குறிப்பாக எவரும் அக்கறைப்பற்றுக்கு செல்வதோ, அங்கிருந்து எவரும் கல்முனைக்கு வருவதோ முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். அத்துடன், சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என கடுமையாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

“ஏனெனில் இவ்வளவு நடந்தும் எமது பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. பலரும் வெளியூர்களுக்கு சென்று வந்து, சுகாதாரத்துறையினருக்கு அறிவிக்காமல் தகவல்களை மறைத்து விட்டு, பொது இடங்கள், கடைத்தெருக்களில் சாதாரணமாக நடமாடுகின்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று இருந்து, மற்றவர்களுக்கும் பரவினால் யார் பொறுப்புக்கூறுவது? இவர்களது செயற்பாடுகள் எமது பிரதேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

“இதனால் வீடுகளில் இருக்கின்ற அப்பாவி மக்களும் கொரோனா தொற்றுக்கு இலக்காக நேரிடும். பல உயிரிழப்புகள் ஏற்படலாம். எனவே, எவராவது வெளியிடங்களுக்கு சென்று வந்தால், சுகாதார துறையினருக்கு அறிவித்து, முறையான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் பாரிய அனர்த்தங்களை தவிர்க்க முடியுமாக இருக்கும். 

அவசியத் தேவை கருதி வெளியிடங்களுக்கு செல்வோர் தயவு செய்து இனியாவது சுகாதாரத்துறையினருக்கு அறிவித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வாருங்கள்” என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .