2025 மே 19, திங்கட்கிழமை

சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாகத் தரமுயர்த்துமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி. அன்சார்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச சபையினை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் நகர சபையாகத் தரமுயர்த்த சம்மாந்துறை பிரதேச அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச பொதுநல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சம்மாந்துறை பிரதேச சபையானது 51 கிராம சேவையாளர் பிரிவினையும் 136 சதுர கிலோமீற்றர் பரப்பளவினையும், 17,925 குடும்பங்களையும், 85,000 மக்கள் தொகையினையும், 43,000 ஆயிரம் வாக்காளர்களையும், 30 கிராமங்களையும், 09 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

கிழக்கிலங்கையில் 1947ஆம் ஆண்டு பட்டின சபையாகத் தரமுயர்த்தப்பட்ட ஒரேயொரு சபை சம்மாந்துறையாகும்.  

சம்மாந்துறைப் பட்டின சபை, சம்மாந்துறைக் கிராமசபை, மல்வத்தை, நாவிதன்வெளி கிராம சபை மற்றும் இறக்காமம் கிராம சபை ஆகிய நான்கு சபைகளாக இயங்கி வந்தன.

சம்மாந்துறை, 1968ஆம் ஆண்டில் உள்ளூராட்சி சபைகளின் மீள் எல்லைப் பிரிவுகளில் பிரகாரம் நாவிதன்வெளி மற்றும் மல்வத்தை என மூன்று கிராம சபைகளாக அமையப் பெற்றன. இதன் மூலம் சம்மாந்துறை, ஒரு பட்டின சபையாகவும், ஒரு கிராம சபையாகவும் செயற்படத் தொடங்கியது.

1988.10.01 அன்று முதல், பிரதேச சபைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படலாயின. பட்டின சபை முறை முற்றாக நீக்கப்பட்டு, கிராம சபையாகவும் நீக்கப்பபட்டு, பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை என மூன்று பிரிவுகளாக்கப்பட்டன.

சம்மாந்துறை பட்டினசபை நகர சபையாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பட்டின அந்தஸ்து குறைக்கப்பட்டு 1988ஆண்டு முதல் இன்று வரை சம்மாந்துறை பிரதேச சபையாகவே இயங்கி வருகின்றது.

எனவே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் சம்மாந்துறை பிரதேச சபையை, நகர சபையாக  தரமுயர்த்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கட்சி வேறுபாடுகளின்றி பிரதேச அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டுமெ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X