2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘சமுர்த்தி கொடுப்பனவு பெறுவதை இலகுபடுத்தவும்’

வி.சுகிர்தகுமார்   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தினூடான கொடுப்பனவுகளைப் பெறுவதை இலகுபடுத்துமாறு, அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பயனாளிகள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த நிதியத்தினூடாக, திருமணம், மரணம், சுகவீனம், பிள்ளைப்பேறு போன்ற நிகழ்வுகளுக்காக பொதுமக்கள் கொடுப்பனவைப் பெற்று வருகின்றனர்.

இக்கொடுப்பனவைப் பெறுவதற்காக குடும்ப விவரங்கள் அடங்கிய சமுர்த்தி சமூக பாதுகாப்பு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஓரு பிரதி  வலயத்திலும் மற்றுமொரு பிரதி சமுர்த்தி தலைமைக்காரியத்திலும் பேணப்படுகின்றன.

இவற்றில் கணவன், மனைவி உள்ளடங்கலாக குடும்ப அங்கத்தவர்கள் அனைவரது பெயர்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர், முகாமையாளர், பிரதேச செயலாளர் ஆகியோரின் கையொப்பங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம், கணவனுக்காக மனைவியும் மனைவிக்காக கணவனும் கையொப்பமிட்டு, கொடுப்பனவுகளைப் பெற முடியும். இவ்வாறே கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அண்மைக்காலமாக, சமுர்த்தி முத்திரையில் யாருடைய பெயர் உள்ளதோ, அவரே ப் பெற முடியும் எனவும் அவ்வாறில்லையெனில் கணவன் மனைவியை உறுதிப்படுத்த மேலதிகமாக இன்னுமோர் உறுதிப்படுத்தல் கடிதம் பெறப்படவேண்டும் எனவும் இக்கடிதத்திலும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர், முகாமையாளர், பிரதேச செயலாளர் ஆகியோரின் கையொப்பங்கள் பெறப்பட்டு, மீண்டும் உறுதிப்படுத்தப்படுதல் அவசியம் எனவும் அலுவலங்களில் தெரிவிக்கப்படுவதாக, பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனால் சிறிய தொகை பணத்தைப் பெறுவதற்காக தூர பிரதேசத்தில் இருந்து வருகை தரும் மக்கள், அதிக பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் சில நாள்களில் அனைத்து உத்தியோகத்தர்களையும் ஒரே நாளில் சந்திக்க முடியாத நிலையில் பல நாள்கள் இதற்காக அலைந்து திரிய வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆகவே, இச்செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு, சம்மந்தப்பட்டவர்களுக்கு, அரசாங்கம் பணிப்புரை வழங்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X