2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘சாய்ந்தமருது பள்ளிவாசல் இரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர், அரசியல் கட்சியொன்றுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு, எமது பள்ளிவாசல், எவருடனும் இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை” என, கல்முனை மாநகர சபைத் தேர்தலில், சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மக்கள் பணிமனை சார்பில் களமிறங்கியுள்ள சுயேட்சைக்குழு வேட்பாளர் ஏ.ஆர்.எம்.அஸீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில், சுயேட்சைக் குழுவுக்கான தேர்தல் காரியாலயமொன்று, பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபாவினால், நேற்றிரவு (02) திறந்து வைக்கப்பட்டது.

இதில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“சாய்ந்தமருது பிரதேச செயலக முன்னாள் நிர்வாக உத்தியோகத்தரும் சாய்ந்தமருது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வேட்பாளர் ஏ.ஆர்.எம்.அஸீம் மேலும் தெரிவிக்கையில்,

"சாய்ந்தமருதில் தற்போது இடம்பெறுவது அரசியல் நடவடிக்கை இல்லை. மாறாக, எமதூர் மக்களின் மூன்று தசாப்த காலக் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி அவசியம் வேண்டுமென, தேசியத்துக்கு எடுத்துக்கூறுகின்ற ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மட்டுமேயாகும்.

“இது எவரும் நிரந்தரமாக அரசியல் செய்வதற்கான சந்தர்ப்பமல்ல.

“சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஆறு வட்டாரங்களையும் வென்று, போனஸ் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டு, வேறு கட்சியுடன் கூட்டாட்சி செய்வதற்கு, எமது பெரிய பள்ளிவாசல் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக, சிலர் கதைகளைப் பரப்பி விட்டுள்ளனர். இந்தக் கூற்றில் எவ்வித உண்மையுமில்லை.

“சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை நாங்கள் ஒருபோதும் எவரிடமும் அடகு வைக்க மாட்டோம். நாங்கள் நிச்சயமாக யாருக்கும் முட்டுக்கொடுக்கப் போக மாட்டோம் என்று உறுதியாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

“சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரச்சினைகளை உண்டாக்கி, தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்த சிலர் திட்டமிடுகின்றனர். சண்டை என்றால் எங்களுக்குச் சக்கரைப்பொங்கல். ஆனால், நாங்கள் ஜனநாயக முறையில் தேர்தலை எதிர்கொள்வோம். இலக்கை அடைவதற்காய் பொறுமை காப்போம்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .