2025 ஜூலை 05, சனிக்கிழமை

’சாரா’ தொடர்பில் தகவலளித்தவருக்கு மரண அச்சுறுத்தல்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

சாய்ந்தமருது வீடொன்றில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் எனக் கூறப்படும் “சாரா” என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் உயிருடன் இருக்கிறாரெனவும் அவரைத் தான் கண்டதாகவும் தகவல் வழங்கிய நபருக்கு, இனந்தெரியாதோர் சிலரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 16 பேரின் உடற்பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணுப் பரிசோதனை அறிக்கைகளையும் கொண்டு பகுப்பாய்வு செய்ததில், சந்தேகத்துக்கிடமாகத் தேடப்படும் சாரா என்பவரின் மரபணுப் பரிசோதனை  (DNA) அறிக்கை பொருந்தவில்லை என்று மன்றில் தெரிவிக்கப்பட்டதை, அடுத்து அவர் தப்பிச் சென்றுவிட்டாரெனக் கூறப்பட்டது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணையைத் தொடர்ந்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று சில தினங்களுக்குப் பின்னர், மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் எல்லைக்குட்பட்ட புறநகர்ப் பகுதி ஒன்றில், சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினியைக் கண்டதாக, 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பாதுகாப்புத் தரப்பினரிடம் தகவல் வழங்கியிருந்தார்.

இவ்வாறு தகவல் வழங்கியவருக்கே, தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக, சட்டத்தரணி ஒருவர் ஊடாக, கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மூடிய அறையில், நீதவானிடம் வாக்குமூலம் ஒன்றை வழங்கிய குறித்த நபர், தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பற்றி விளக்கியுள்ளார். இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் தொடர் நடவடிக்கை எடுப்பதற்காக, ஒக்டோபர் 19ஆம் திகதிக்கு, வழக்கை நீதவான் ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .