2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடுவதே காலத்தின் தேவை

Princiya Dixci   / 2022 ஜூலை 18 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஈடுபடவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய ஜனாதிபதித் தெரிவு தொடர்பாக ஆலையடிவேம்பு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் அராஜகங்களை மேற்கொண்ட பொருளாதார ரீதியாக சீரழித்த மற்றும் சிறுபான்மை இனத்தின் இருப்பை அழிப்பதற்காக மத ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்த மிக மோசமான ஒரு ஜனாதிபதி, அனைத்து மக்களாலும் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.

“இந்நிலையில், புதியதொரு ஜனாதிபதி அனைத்து பாராளுமன்ற பிரதிநிதிகளினாலும் தெரிவு செய்யப்படவிருக்கின்றார். தமிழ் பரப்பில் இருக்கின்ற தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட கட்சிகள் மற்றும் தமிழர் நலன் சார்ந்து செயற்படுகின்ற தமிழ்த் தேசிய பரப்புக்கு அப்பால் இருக்கின்ற மலையக  கட்சிகள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பது முக்கியமானதாக இருக்கின்றது.

“வட, கிழக்கு மாகாணத்தில்  தமிழ் மக்களுக்கு அதிகளவான பிரச்சினைகள் காணப்படுகின்றன. புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை மட்டுமல்லாமல் ஏனைய இறைமை சார்ந்த பிரச்சினைகள் எங்கள் இனம் சார்ந்த பிரச்சினைகள் கூடுதலாக காணப்படுகின்றன.

“விசேடமாக அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற தமிழர்களின் நலன் சார்ந்த விடயங்கள் கொடுக்கப்படுகின்ற கோரிக்கையானது  உள்ளடக்கப்படவேண்டிய முக்கியமான ஒன்றாகியுள்ளது. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மிக  முக்கியமானது அம்பாறை மாவட்டமாகும்.

“அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் இருப்பு என்பது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.அவர்களின் உரிமை சாரந்த விடயங்கள் இனம் சார்ந்த விடயங்கள் மதம் சார்ந்த விடயங்கள் இருப்பு சார்ந்த விடயங்கள் என்பன தற்போது கேள்விக்குறியாகி கவலைக்கிடமாகியுள்ளது.

 “அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது முதலாவது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.

“இரண்டாது தொல்லியல் மற்றும் வன இலாக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். தொல்லியல் என்ற போர்வையில் விகாரைகள் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைள் மற்றும் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்ற நிலைமைகள் நிறுத்தப்பட வேண்டும்.இவ்வாறான விடயங்கள் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற முக்கியமான பிரச்சினைகளாகும்.

“அந்த வகையில், புதிய  ஜனாதிபதி வேட்பாளர்களிடையே தமிழ் தேசிய கட்சிகள் இவ்வாறான விடயங்களை  வேண்டுகோளாக முன்வைப்பது அவசியமாகும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .