2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நிதிக் குழுவுக்கு இரகசிய வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தெரிவு

Princiya Dixci   / 2021 ஜனவரி 28 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, பாறுக் ஷிஹான், ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்

கல்முனை மாநகர சபையின் நிதி நிலையியற் குழுவுக்கு இரகசிய வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று (27) பிற்பகல் நடைபெற்றது.

இந்த அமர்வில் நடப்பு ஆண்டுக்கான நிலையியல் குழுக்களுக்கான அங்கத்தவர்கள் தெரிவும் இடம்பெற்றது. இதில் பிரதான குழுவான நிதிக்குழுவுக்கு 05 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 07 உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டதனால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான பொன் செல்வநாயகம், எஸ்.குபேரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சி.எம்.முபீத் ஆகியோர் கூடிய வாக்குகளைப் பெற்று நிதிக்குழுவுக்கு தெரிவாகியுள்ளனர்.

நிதிக்குழுவுக்கு போட்டியிட்ட சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் எம்.ஐ.ஏ.அஸீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் ஆகியோர் தெரிவு செய்யப்படவில்லை.  

மாநகர மேயர் ஏ.எம்.றகீப், பதவி வழியில் இந்த நிதி நிலையியல் குழுவின் தவிசாளராக செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மாநகர சபையின் சுகாதாரக் குழு, பொது வசதிகள் குழு, கல்வி, கலாசார மற்றும் விளையாட்டு நிலையியற் குழுக்களுக்கான உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்றி, சாதாரண முறையில் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .