2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘பட்டதாரிகள் விடயத்தில் அரசாங்கத்திடம் தீர்வுத்திட்டம் கிடையாது’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடளாவிய ரீதியில் வேலையற்றிருக்கும் 57,000 பட்டதாரிகள் விடயத்தில் அரசாங்கத்திடம் முறையானதொரு வேலைத்திட்டமோ, தீர்வுத்திட்டவுமோ கிடையாதென, அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஊடவியலாளர்கள் மாநாடு, அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இன்று (25) இடம்பெற்ற போதே, ஒன்றியத்தின் தலைவர் ஏ.எச்.ஜெஸீர், இவ்வாறு தெரிவித்தார்.

 அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், காலங்களை இழுத்தடிப்புச் செய்யாமல், கிழக்கு மாகாணத்தில் வேலை அற்றிருக்கும் 7,000  பட்டதாரிகளுக்கும் அரச நியமனங்களை வழங்குவதற்கு, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 1,000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை உள்ளீர்ப்பதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்து வரும் நடவடிக்கையை, தமது ஒன்றியம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வெற்றிடங்களுக்கு போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 1,281 பட்டதாரிகளையும் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஒன்றியத்தின் தலைவர் ஜெஸீர் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டிருக்கின்ற மத்திய அரசின் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தின் போது பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் அவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீள சேவையில் இணைப்பதற்கு, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வழங்கி இருந்த ஆலோசனையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் நியமனத்தில் உடல், உள ரீதியாக ஆரோக்கியமானவர்களையே நியமிப்போம் என்று தெரிவித்து, பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைக்கும் போது, வயதெல்லையை 35ஆக மட்டுப்படுத்தினார்கள். இந்நிலையில், 55, 60 வயதுகளைத் தாண்டியவர்களை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கு எடுத்து வரும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டுமென்றார்.

வேலையில்லாமல் இருந்து வரும் பட்டதாரிகள் விடயத்தில், அரசாங்கத்திடம் முறையானதொரு திட்டம் எதுவும் இல்லாததை, நாடாளுமன்ற மக்கள் பிரதிதிகளின் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளிலிருந்து அறிய முடிகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .