2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணத்துக்கு உறுதி

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, உடனடியாக 10,000 ரூபாய் உதவித் தொகையும் உலருணவும் வழங்க, அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த வணசிங்க, கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப்பிடம் உறுதியளித்துள்ளார்.

நேற்று (17) மாலை, திடீரெனெ வீசிய மினி சூறாவளியால், கல்முனை மாநகர பிரதேசங்களில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள், சில பாடசாலைகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சில பகுதிகளை, இன்று (18) பார்வையிட்ட கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப், அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த வணசிங்கவுடன் அலைபேசியில் தொடர்புகொண்டு, மக்களின் நிலைமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதன்போது, வீடுகள் பாதிக்கப்பட்டு நிர்க்கத்தியடைந்துள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், வீடுகள் புனரமைப்புக்கு அவசரமாக நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவற்றுக்கு இணக்கம் தெரிவித்த மாவட்ட செயலாளர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக 10,000 ரூபாய் உதவித் தொகையையும் உலருணவையும் வழங்க, பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்குவதாகவும், பாதிக்கப்பட்ட வீடுகளின் சேத மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர், உரிய நட்டஈட்டுத் தொகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்வதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பிற விடயங்கள் குறித்து ஏனைய திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மாநகர மேயர் றகீப் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .