2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு

Mayu   / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனைப் பிராந்திய உணவகங்களின் ஊடாகப் பொதுமக்களுக்குச் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், சகல உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பேரில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி ஐ.எல்.எம். மதீனா சரப்டீன் அவர்களின் வழிகாட்டலில் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த திங்கட்கிழமை (20) இரவு முதல் கல்முனை மற்றும் மருதமுனை பிரதேசங்களில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் இவ்வாறு அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் தலைமையில், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ். ஜீவராஜா உள்ளிட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, உணவகங்களின் சமையலறைகள், களஞ்சிய அறைகள் மற்றும் உணவு தயாரிக்கப்பட்டுப் பரிமாறப்படும் இடங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இதன்போது மனித நுகர்வுக்கு ஒவ்வாத மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளுடன் காணப்பட்ட பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

சுகாதார நடைமுறைகளை மீறி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட 3 உணவக உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உணவு தயாரிப்பு முறைகள், களஞ்சியப்படுத்தல் மற்றும் தூய்மை பேணுதல் குறித்துத் தேவையான ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டன.

பாறுக் ஷிஹான்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .