2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மார்ச் 18 வரை ஜனாஸாவை எரிக்கத் தடை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மெளலானா

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சாய்ந்தமருது எம்.எம்.ஆதம்பாவின் ஜனாஸாவை, மார்ச் 18ஆம் திகதி வரை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு, கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாய்ந்தமருது மார்கட் வீதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான எம்.எம்.ஆதம்பாவா சுகவீனம் காரணமாக, கடந்த 12ஆம் திகதி அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்திருந்தார்.

இதையடுத்து, இவரது உடலத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவரது ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கவில்லை எனவும் இம்மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து, அவரது மரணத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, அவரது குடும்பம் சார்பில், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (15) மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அம்மனு விசாரணையின்றி, தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இம்மனு, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் இன்று (16) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களில் திருப்தியுற்ற நீதிபதி, மனுவை விசாரணைக்காக ஏற்றுக்கொண்டதுடன், குறித்த ஜனாஸாவை மார்ச் 18 ஆம் திகதி வரை தகனம் செய்யாமல், அவ்வாறே வைத்திருக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதிவாதிகளை அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்குமாறும் நீதிபதி பணித்தார்.

மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.அப்பாஸ் மற்றும் சட்டத்தரணிகளான முகைமீன் காலித், சஞ்சித் காதர் இப்றாஹிம், றதீப் அஹமட் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .