R.Tharaniya / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டிய ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களைப் பல சிரமங்களுக்கு மத்தியில் கொஞ்சம், கொஞ்சமாக அமுல்படுத்தி கொண்டு வருகிறது.
சுமார் 60 ஆண்டுகள் ஊறிப் போயிருந்த அரசியலில் இருந்து, நாட்டை மீட்டெடுப்பது என்பது இலகுவானது அல்ல, ஜனாதிபதி அல்லது அமைச்சரவை இன்றேல் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினரால் மட்டுமே இதை செய்ய முடியாது. அதற்கு முழு ஒத்துழைப்பும் அவசியமாகும்.
எனினும், ஒரு சிலர் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியும் என பலரும் தெரிவிக்கின்றனர். எனினும், அரசாங்கம் தனது ஒவ்வொரு அடியையும், கடுமையாக சிந்தித்ததன் பின்னர் முன்னெடுக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சில வரப்பிரசாதங்களை இரத்துச் செய்யும் சட்டமூலம், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, அன்றைய தினமே சட்டமாக்கப்பட்டது. இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறு செய்யப்பட்ட முதலாவது தருணம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
அந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் பாராளுமன்றத்துக்கு கிடைத்ததன் பின்னர் உடனடியாகவே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்பின்னர், முன்னாள் ஜனாதிபதிகள் கொழும்பிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்னும் சிலர், கால அவகாசத்தைக் கோரியுள்ளனர். அதேபோல, ஒவ்வொன்றுக்காகவும் அதிரடியான சட்டத்தைக் கொண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வின் செறிவான பேச்சுக்களின் ஊடாக அவதானிக்க முடிகின்றது.
“புதிய அரசியலுக்கு ஏற்றவாறு மாறுங்கள், இல்லையென்றால் விட்டுவிட்டுச் சென்றுவிடுங்கள்” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். இதேவேளை, “வேலைச் செய், இன்றேல் வெளியேறு” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச இயந்திரம் சீராக இருக்க வேண்டும். எனினும், ஆகக் குறைந்த கைவிரல் அடையாளத்தை வைப்பதற்குக் கூட, அரச ஊழியர்களில் ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என்றால், அவர்களின் வருகை அல்லது கடமை முடிந்து செல்லும் நேரங்களில், மேலதிக கொடுப்பனவுகளை பெரும் நாட்களின் கடுமையான மோசடியில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மையாகும்.
சுய ஒழுக்கத்துடன், நேரம்,காலம் தவறாது கடமைக்கு சமூகமளித்து, தங்களுக்குரிய கடமைகளை மிகச்சரியாக, நேர்த்தியாகச் செய்யும் எவரும், கைவிரல் அடையாளத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள், ஏமாற்றும் பேர்வழிகளே எதிர்ப்பை தெரிவிப்பர்.
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய இடங்களில் எதிர்க்கவேண்டும். அத்துடன், புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு அணிதிரண்டு ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில், நமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த நாடு முக்கியம்.
8 minute ago
25 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
32 minute ago
38 minute ago