2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கபளீகரத்துக்கு எதிராக களத்தில் குதித்த ஜீவனிடம் ஒரு வேண்டுகோள்

Editorial   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபளீகரத்துக்கு எதிராக களத்தில் குதித்த ஜீவனிடம் ஒரு வேண்டுகோள்

சிறுபான்மையின மக்களின் மத அடையாளங்களை இல்லாதொழித்து, அந்தந்த இடங்களை கபளீகரம் செய்தற்கான சூட்சுமமான முன்னெடுப்புகள் ஒருபுறம்  அரங்கேற்றப்படும் ஏகநேரத்தில், அச்சுறுத்தி அதிரடியாக கைப்பற்ற முயற்சிகளும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. இவையெல்லாம், ஓர் அரசமரத்தையும், புத்தர் சிலையையும் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. 

இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது என அப்பட்டமாகவே ஜனாதிபதி அறிவித்திருக்கும் நிலையில், மதங்களுக்கு இடையில், அன்றேல் சிறுபான்மையினங்களை சண்டைக்கு வலிந்து இழுக்கும் வகையில், பௌத்த தேரர்கள் செயற்படுகின்றனர். இவை தீர்வுத்திட்டம், நிம்மதியான வாழ்வு, சகோதரத்துவம், எதிர்காலம் உள்ளிட்டவற்றை கேள்விக்கு உட்படுத்தியுள்ளன.

தமிழ், முஸ்லிம்கள் சிறுபான்மை இனங்கள் என்பதை யாரும் மறுதலிக்கவில்லை. அவர்களுக்கும் இந்நாட்டில் வாழும் உரிமை உள்ளது. தங்களுடைய மதங்களை பின்பற்றும் கடப்பாடுகளை அவர்கள் கொண்டிருக்கின்றனர். ஆனால், சிறுபான்மையின மதச் சின்னங்களை அழித்தொழித்து அவ்விடங்களில் தொல்பொருள் இருக்கின்றனவென அடையாளப்படுத்தி, பெளத்த விகாரைகளை கட்டுவது எவ்விதத்திலும் நியாயமானது அல்ல.

ஏனைய இன, மதங்களைச் சார்ந்த தொல்பொருட்கள் ஏன் இருக்கக்கூடாது. பௌத்த மதச் சின்னங்கள் மட்டும்தான் தொல்பொருளா? அவ்வாறு இருந்தால்கூட, தமிழ் பௌத்தம் இலங்கையில் பரவி இருந்ததை இவர்கள் அறியமாட்டார்களா?

கச்சத்தீவில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், அங்கிருக்கும் கடற்படையினர் வணங்குவதற்காக சின்ன சிலையொன்று வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை விளக்கமளித்திருந்தது. அந்த சூடு தணிவதற்குள் வெடுக்குநாறி விவகாரம் தலைதூக்கிவிட்டது.

வடக்கு, கிழக்கில் கேந்திர நிலையங்களில் பௌத்த விகாரைகளை கட்டும் செயற்பாடுகளை அரவமின்றி முன்னெடுப்பதற்காக, வெடுக்குநாறியை கிளறி, அதிலிருந்து கிளம்பும் வெப்பத்தில் குளிர்காய்வதற்கு முயன்றிருக்கலாம்.

ஆனால், புல்மோட்டை, பொன்மலைக்குடாவில், புத்தர் சிலையை நிறுவதற்காக பௌத்த தேரர்கள் அப்பட்டமாகவே சென்றிருந்தனர்.அதற்கு பிரதேசவாசிகள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டினர். தேரர்களுடன் சென்றிருந்த அமைச்சர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர், கைத்துப்பாக்கியை காண்பித்து சுடுவதாக எச்சரித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் அதள பாதாளத்துக்குள் விழுந்து கிடக்கிறது. அதிலிருந்து மீண்டெழ வேண்டுமாயின் சகலரும் ஓர் அணியில் திரளவேண்டும். இனங்களுக்கு இடையில் வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், குரோதங்கள் வலுப்பெறும்.

கடும் சர்ச்சைக்கு உள்ளாக்கியிருக்கும்  வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் சென்றிருந்தார். மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை களத்துக்குச் சென்று, தனது தந்தையான அமரர் ஆறுமுகன் தொண்டமான் தட்டிக்கேட்பதைப் போல், களத்தில் குதித்துள்ளார் ஜீவன்; அவரது கரங்களை பலப்படுத்த வேண்டும்.

அதேபோல, இன, மத பதட்டங்களைத் தூண்டும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில், அமைச்சரவையில் ஜீவன் தொண்டமான் பிரஸ்தாபிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். 

03.04.2023

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .