2025 ஜூலை 05, சனிக்கிழமை

குழந்தையிடம் தவழ்ந்து சாட்சியான சிரிக்கும் பொம்மை

R.Tharaniya   / 2025 ஜூலை 03 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்களை திறந்தவாறு  சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மையொன்று, உலகத்தின் கவனத்தை ஈர்த்திருப்பது மட்டுமன்றி, மிகப்பெரிய மனித புதைக்குழி துயரத்தின் குறியீடாகவும் மாறியிருக்கின்றது என்பதே உண்மையாகும். ஒரு குழந்தையின் கைகளில் தவழ்ந்து, அதன் சிரிப்புக்கும் துள்ளலுக்கும் சாட்சியாக இந்த பொம்மை இருந்திருக்க வேண்டும். 

செம்மணி மனிதப் புதைகுழியில் பின்னிப்பிணைந்து ஐந்து எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகளுடன் சிறு குழந்தையின் எலும்புக் கூட்டுடன் சப்பாத்து, குழந்தைகள் விளையாடும் சிறிய பொம்மையும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அந்த சிரிக்கும் பொம்மை, அக்குழந்தையுடையது. விட்டுவிடாது அக்குழந்தை, அந்த பொம்மையாக இறுகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். 

யாழ்ப்பாணம் - செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1ஆம் திகதி நடத்தப்பட்ட அகழ்வு பணிகளின் போது மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து யாழ்ப்பாணம் 1995ஆம் ஆண்டு காலப் பகுதியில் முழுமையாக மீட்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படுவோர் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், செம்மணி பகுதியில் 1999ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வு பணிகளில் போது, அந்த பகுதியில் மனிதப் புதைகுழி காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த மனிதப் புதைகுழியிலிருந்து பெருமளவிலான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இந்த செம்மணியை அண்மித்த பகுதியிலிருந்து தற்போது சித்துபாத்தி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சித்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் மற்றும் ஆதாரங்களைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிலர் வெவ்வேறு விதங்களில் சித்தரித்து வருகின்றமையை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

அவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென எச்சரிக்கை பட்டுள்ளது. இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கும் மனித எலும்புக்கூடுகளைப் பார்க்கும்போது, கொத்துக் கொத்தாக கொன்று புதைக்கப்பட்டுள்ளனர் என கூறுவதை விட, பாரிய கிடங்கில் கொட்டப்பட்டுள்ளனர் என்றே கூறவேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்  இலங்கைக்கு விஜயம் செய்து, ‘அணையா விளக்கு’ போராட்ட களத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதுமட்டுமன்றி, செம்மணி சித்துபாத்தி புதைகுழிகளுக்கும் சென்று அவதானித்துள்ளார்.

குழந்தையிடம் தவழ்ந்து சாட்சியான சிரிக்கும் பொம்மையின் படத்தையும் சர்வதேசமே அவதானித்து இருக்கும். ஆகையால், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதுடன், குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக்கொடுக்க ஆகக் குறைந்தது அழுத்தங்களையாவது கொடுக்கவேண்டும்.

தமிழ்த் தரப்பு விடுக்கும் சர்வதேச பொறிமுறை சிறந்தது. ஏனெனில், உள்நாட்டு பொறிமுறையில் கண்களை திறந்து கொண்டே சிரிக்கும் பொம்மையின் கண்களையும் மூடிவிடுவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .