2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி தாளம்போடக் கூடாது

A.Kanagaraj   / 2023 ஏப்ரல் 09 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழைய பல்லவியை கோரஸாக பாடும் முதலாளிகள்; ஜனாதிபதி தாளம்போடக் கூடாது

பழைய நாடகங்களை பார்க்கும் போது, அதில் ‘கோரஸ்’ பாடுவது ஓர் இனிமையாகதான் இருக்கும். நாடகங்கள் என்றாலே நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நமது நாட்டைப் பொறுத்தவரையில், அரசியல்வாதிகளுக்கு அடுத்த இடங்களில் முதலாளிகள் இருக்கின்றனர் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், ஜனரஞ்ச முடிவுகளை எடுக்கவில்லை. மக்களின் மீது கடுஞ்சுமையைத் திணிக்கும் வகையிலான தீர்மானங்களையே எடுத்தது. இதனால், மக்கள் கொதித்தெழுந்தனர். எனினும், கீழ்மட்டம், மத்திய தரம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் சகல மட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடிக்கும் வகையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

எனினும், கீழ் மட்டங்களைச் சேர்ந்தவர்களே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறான நிலையில்தான், புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில், பல பொருட்களின் விலைகளை கிடுகிடுவென அரசாங்கம் குறைத்தது. சேவைகளின் கட்டணங்களை குறைக்கும் வகையில் எரிபொருளுக்கான கட்டணங்களை குறைத்தது. ‘கோட்டா’வை கூட்டியது.

இவையெல்லாம் சாதாரண மக்களுக்கு சந்தோஷமான செய்திகளாக மட்டுமே இருக்கின்றன. ஒருசிலவற்றை தவிர ஏனையவை, செய்திகளாக மட்டுமே இருக்கின்றன; விலை குறைப்பின் பலாபலன்கள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை என்றே சொல்லவேண்டும்.

பல முதலாளிகள் விலைகளை குறைக்கவே இல்லை. தட்டிக்கேட்கும் போது பழைய கையிருப்பு என மழுப்பிவிடுகின்றனர். இல்லையேல், விலை குறையாத பொருட்களின் பெயர்களைக்கூறி, அதுவே தங்களின் மூலப்பொருள் என விளக்கம் கொடுக்கின்றனர்.

பணத்தை மட்டுமே எந்த வகையிலாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஒருசில முதலாளிகளுக்கு, சாதாரண மக்களின் வேதனைகள் புரியாது. ஜனரஞ்சகமான தீர்மானங்களை அரசாங்கம் எடுத்திருந்தாலும். அதன் பலன்களை மக்கள் அனுபவிக்கவில்லை எனில், அரசாங்கத்தின் மீது அவதூறுகள் வந்துவிழும். நிலைமையை கவனத்தில் எடுத்து, அதிரடியான சுற்றிவளைப்புகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

முதலாளிகள் பலர், “பழைய கையிருப்பு”, “விலை குறைந்த பொருட்கள் சந்தைக்கு வரவில்லை”. “பழைய காஸ்களையே பயன்படுத்துகின்றோம்”, “சீனி, பலசரக்கு பொருட்களின் விலைகள் குறையவில்லை” என்றெல்லாம் கதையளக்கின்றனர். இவற்றையே ஒரு ‘கோரஸாக’ வைத்துள்ளனர். அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடமளிக்காது, அதிரடியான நடவடிக்கையில் இறங்கவேண்டும்.

இல்லையில், மக்களின் நலன்கருதி எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரதிபலன்கள், சாதாரண மக்களுக்கு கிடைக்காமலே போய்விடும். வெறும் ஜனரஞ்சக சொற்களுக்காக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன என்ற விமர்சனங்களுக்கு உள்ளாகவேண்டிய நிலைமையும் ஏற்படும்.

நுகர்வோர் அதிகாரசபையும், கடுமையான தீர்மானங்களை எடுத்து, விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாத அல்லது விலைகளை குறைக்காத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக, கடுமையான முறையில் சட்டங்களை அமல்படுத்தவேண்டும். இல்லையேல், விலைக்குறைப்பின் சுவையை ஒருதரப்பினர் மட்டுமே சுவைத்துக்கொண்டு இருப்பர். சாதாரண மக்கள் ஏமாளிகளாகவும் வேடிக்கை பார்க்கும் தரப்பாகவும் இருந்துவிடுவார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ளவேண்டும்! 07.04.2023

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X