2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நேபாளத்தை கொளுத்திய ‘நெப்போ பேபி’யும் இலங்கை அரகலயவும்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசாங்கம் கடந்த 5 ஆம் திகதி முடக்கியது. சீனாவின் டிக்டாக் செயலிக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை.

இந்த தடைவிதிப்பு, நேபாள இளம் தலைமுறையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.அதனையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. அந்நாட்டின் சமூக வலைத்தளங்களில் ‘நெப்போ பேபி’ என்ற பெயரில் வீடியோக்கள் அண்மையில் பரவின.

அதாவது நேபாளத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர்.  இது அங்குள்ள இளைஞர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் குவிந்து ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்   19 பேர் உயிரிழந்தனர்.

400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஒருகட்டத்தில் பாராளுமன்றத்துக்கும் அமைச்சர்கள், நீதியரசர்களின் வீடுகளுக்குத் தீயிட்டுக் கொளுத்தினர். கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் உயிருடன் கொளுத்தப்பட்டார்.  

ஜனநாயக ரீதியான போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து, அங்கு கலவரம் வெடித்தது. தீவைத்தனர். முன்னாள் அமைச்சர்களை அடித்து இழுத்துச் சென்றனர். இதேபோன்றதொரு நிலைமை இலங்கையில் 2022 மே 9 ஆம் திகதியன்று இடம்பெற்றது. 

இலங்கையின் ‘அரகலய’ போராட்டத்தின்போது, அன்று, ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் வன்முறையாக வெடித்தது, இதில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இது இலங்கையின் வன்முறை அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.  

இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரத்தின் தொடக்கமாகக் கருதப்படும் காலி முகத்திடலில், மக்கள் எழுச்சியின் கூட்டான வலிமையைக் கண்டு அச்சமடைந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் பயப்படத் தொடங்கியதை இது உணர்த்தியது. 

இவ்வாறான நிலையில், நேபாளத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து, ஜென் z போராட்டக்காரர்கள் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும்.

குடிமக்கள், நிபுணர்கள், இளைஞர்கள் பிரதிநிதித்துவத்தோடு நேபாள அரசமைப்பை முழுவதுமாக திருத்தி எழுத வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக நடந்த ஊழல் குறித்தும், அரசுடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜென் z போராட்டக்காரர்கள் நிபந்தனைளை விதித்துள்ளனர். 

ஒரு நாட்டில் ஊழல் மோசடி இடம்பெற்றால், ஜனநாயக போராட்டத்தைத் தவிர்க்க முடியாது. அந்த போராட்டத்தை அதிகாரத்தைக் கொண்டு அடக்க முயன்றால், இழப்புகளையும் தவிர்க்க முடியாது என்பதை ஜனநாயக நாடுகள் கவனத்தில் கொள்வது அவசியம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X