2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

மீண்டுமொரு கரூர் குரூரத்துக்கு வழி சமைக்காதீர்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் அவ்வப்போது இடம்பெறும் சம்பவங்கள் உலகையே ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்துவிடும். அவ்வாறுதான் கரூர் சம்பவமும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

கரூரில் அரசியல் கூட்டமொன்றின் சனநெரிசலில் சிக்கி 40 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழக வெற்றிக் கழக  (த.வெ.க) தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை (27) நடத்திய அரசியல் கூட்டத்திலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நெரிசலில் சிக்கி மரணமடைந்தவர்களில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 13 பேர் ஆண்கள் அடங்குகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து பரஸ்பர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

கூட்டத்துக்கு விஜய் நேரத்துக்கு வராமல், பலமணிநேரம் தாமதித்து வந்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டதாக விஜய்க்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

த.வெ.க இதற்கு முன்னர் நடத்திய அரசியல் கூட்டங்களுக்கும் தாமதித்தே வந்துள்ளார். ஆக,  தங்களுடைய கூட்டத்துக்கு சனம் திரண்டு வந்துள்ளது என்பதைக் காண்பிக்கும் வகையிலேயே விஜய், தாதாகக் கூட்டங்களுக்கு வருகைதருகின்றார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. 

கரூரில் பெரிய கூட்டத்தை நடத்துவதற்கான, இடங்களை ஒதுக்கித்தாராமையில் இவ்வனர்த்தம் ஏற்பட்டதாகவும், அனர்த்தம் ஏற்பட்ட ஒருசில நிமிடங்களுக்குள், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் வைத்தியசாலைக்குப் படையெடுத்தது எப்படி? உள்ளிட்ட சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

எனினும், 40 அப்பாவி உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஒரு நடிகர், ஆகையால், அவரை நேருக்கு நேரப் பார்ப்பதற்காக வீடுகளில் குழந்தைகள் அடம் பிடித்திருக்கக் கூடும். அதனால், பெற்றோர்களுக்கு அழைத்து வந்திருக்கலாம்.

எனினும், இவ்வாறான நிலைமை ஏற்படுமென முன்கூட்டியே அறிந்திருந்தால், யார்தான், தங்களுடைய பிள்ளைகளை அழைத்துச் சென்றிருப்பார்களா?, இனிமேல் 
அழைத்தே செல்லமாட்டார்கள். 

கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மரணமடைந்த சம்பவம் முதன்முறையாக நடைபெற்ற ஒன்றல்ல. எனினும், அரசியல் கூட்டமொன்றில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையானோர் மரணமடைந்தது கரூரிலேயே ஆகும். அதனால்தான், இவ்வளவாகப் பேசப்படுகின்றது.

ஆந்திராவில் கடந்த 2022-ம் ஆண்டு நெல்லூர் கண்டுகூரில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கூட்டமொன்றை நடத்துவதற்கு முன்னர், நன்கு திட்டமிடவேண்டும். கடந்த கூட்டத்தின் போது, பாரிய மின்கம்பமொன்று விழுந்து. தெய்வாதீனமான எவருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.

எனினும், காரொன்று சேதமடைந்தது. கரூரில் இடம்பெற்ற சம்பவத்துக்கு நீதி கிடைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசாங்கம், மத்திய அரசாங்கம், த.வெ.க அறிவித்துள்ளதைப்போல நட்டஈடுகள் வழங்கப்படவேண்டும்.

உரிய வகையிலான விசாரணைகளை நடத்தி, இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தி நீதியை நிலைநாட்டவேண்டும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X