Janu / 2026 மார்ச் 02 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்னாகம் என்னும் மாத்தளை மாநகரின் கண்ணென எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மாசி மகோற்சவப் பெருவிழா தற்போது வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. இலங்கையில் சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்கச் செய்யும் இவ்வாலயம், 108 அடி உயரமான இராஜகோபுரத்தைக் கொண்டுள்ளதோடு, பஞ்சரதங்களை (ஐந்து தேர்கள்) ஒரே இடத்தில் கொண்டுள்ளமை இதன் தனிச்சிறப்பாகும்.
"மூங்கிலின் நாதமும் தென்றலின் கீதமும் உன் புகழ்பாடுதம்மா..."
இலங்காபுரியின் மத்திய ஸ்தானத்தில், உருவத்திருமேனி கொண்டு திவ்ய சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னையின் இவ்வாண்டுக்கான மாசி மகோற்சவம், கடந்த 08.02.2026 (தை மாதம் 25ஆம் நாள்) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து 24 நாட்கள் விசேட பூசைகள் இடம்பெற்று, இன்று (02.03.2026) மாசி மகத்தன்று அம்பாளுக்குப் பஞ்சரத உற்சவம் (தேர்த் திருவிழா) நடைபெறுகிறது.
ஆலய அமைவிடம்
இயற்கை எழில் தவழும் மத்திய மலைநாட்டிலே, கண்டியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழும் மாத்தளை மாநகரின் மத்தியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. தென்னிந்தியக் கலைப்பாணியிலான சிற்ப வேலைப்பாடுகளுடன் 108 அடியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் இராஜகோபுரம் பார்ப்பவர் கண்களைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
வரலாறும் சிறப்பும்
இலங்கையின் மிக உயரமான இராஜகோபுரம் மற்றும் ஒரே நேரத்தில் வீதியுலா வரும் ஐந்து தேர்களைக் கொண்ட பெருமை இவ்வாலயத்திற்கு உண்டு. ஆரம்பக் காலத்தில் நித்திய பூசைகள் மட்டுமே இடம்பெற்று வந்த இவ்வாலயத்தில், காலப்போக்கில் திருவிழாக்கள் விரிவுபடுத்தப்பட்டன. 1934ஆம் ஆண்டு விநாயகர், சிவன்-அம்பாள் மற்றும் முருகப் பெருமானுக்குத் தனித்தனித் தேர்கள் அமைக்கப்பட்டன. 1955ஆம் ஆண்டளவில் இராஜகோபுரம் உட்பட பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மஹா மண்டபம், வசந்த மண்டபம் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கான சந்நிதிகளும் உருவாக்கப்பட்டன.
1977ஆம் ஆண்டு சந்தன மரத்திலான சித்திரத் தேர் வெள்ளோட்டம் விடப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது அத்தேர் தீயால் எரியூட்டப்பட்டது. பின்னர், 1992ஆம் ஆண்டு புதிய சித்திரத் தேர்கள் உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு, இன்று கம்பீரமாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றன.
மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம்
கருவறையில் திவ்ய சிம்மாசனத்தில் அமர்ந்து அன்னை முத்துமாரி அருளாசி வழங்குகிறாள். ஆலயத்தின் உட்புறத்திலேயே தீர்த்தக்கேணியும், பல வருடங்கள் பழமைவாய்ந்த தலவிருட்சமும் மிகவும் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன.
திருவிழாக்களும் வழிபாடுகளும்
இந்து சமயப் பாரம்பரியங்களைப் பேணும் வகையில் ஆடிப்பெருந்திருவிழா, தை மாத பிரம்மோற்சவம், மாசிமகம், நவராத்திரி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. குறிப்பாகச் சிவராத்திரி, விளக்குப் பூசை மற்றும் ஐயப்ப பூசைகளின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் - சிங்களப் பக்தர்கள் திரண்டு வந்து அன்னையின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
சமூகப் பணிகள்
ஆலயம் வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி, சமூக மேம்பாட்டு மையமாகவும் திகழ்கின்றது:
இந்தத் திருத்தலத்தின் பஞ்சரத வீதியுலா காட்சியினைக் கண்டு, அன்னை முத்துமாரியின் அருளைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ஜயகுமார் ஷான்






8 hours ago
8 hours ago
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
02 Mar 2026