2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஆத்திரத்தில் பொலிஸ் அதிகாரியை அடித்தே கொன்ற மக்கள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 20 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் பொலிஸ்  காவலில் மரணம் அடைந்த ஆத்திரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி பொலிஸ் அதிகாரி ஒருவரை அடித்தே கொன்ற சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் அமைந்துள்ளது பால்தர்  பொலிஸ்  நிலையம். இதில் பொலிஸ்  கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் ராஜ் மங்கள் ராய்.  இந்நிலையில், ஆர்யா நகர் பகுதியை சேர்ந்த அமிர்த யாதவ் (வயது 30) என்பவரை தடைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அப்பொலிஸார் அண்மையில் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரின் காவலில் இருந்த போது அந்நபர் திடீரென உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  அவரது மரணம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் கட்டைகளையும், இரும்பு தடிகளையும் எடுத்து கொண்டு  குறித்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும் பொலிஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். 

இத்தாக்குதலில் காயமடைந்த 4 பொலிஸார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதில் ராய் என்பவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதன்பின் அப்பகுதியில்  பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் தேனீ கடித்தே  உயிரிழந்து உள்ளார் எனவும்  முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .