2025 மே 02, வெள்ளிக்கிழமை

இந்தியாவில் முதன்முதலாக தனியார் தங்க சுரங்கம்

Freelancer   / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம் அமைகிறது. 

இதன் மூலம் ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994ஆம் ஆண்டு கண்டறிந்தது. தங்கம் உள்ளதா என ஆய்வு செய்ய பல கோடி முதலீடு செய்ய வேண்டும் என்பதால் எந்த தனியார் நிறுவனமும் ஆய்வுக்கு முன்வரவில்லை. 

இதையடுத்து 2005ஆம் ஆண்டு சுரங்க கொள்கை மாற்றி அமைக்கப்பட்ட பின், மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூரை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய உரிமம் பெற்றது.

 இருப்பினும், அனைத்து அனுமதிகளையும் பெற்று சோதனையை தொடங்க சுமார் 10 ஆண்டுகள் ஆனது. இந்த இடைப்பட்ட காலத்தில் சோதனை உரிமம் பெற்றிருந்த ஜியோ மைசூர் நிறுவனத்தின் 40 சதவீதம் பங்குகளை டெக்கான் கோல்ட் மைன்ஸ் என்ற நிறுவனம் வாங்கியது. 

மேலும் ஆய்வு பணிக்காக துக்கலி மற்றும் மட்டிகேரா மண்டலங்களில் சுமார் 750 ஏக்கர் நிலத்தையும் வாங்கியது. பின்னர் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. 

அனைத்தும் முடிந்து 2021ம் ஆண்டில் சோதனையை தொடங்கியது.

 இது குறித்து ஜியோ மைசூரின் நிர்வாக இயக்குனர் பிரசாத் கூறுகையில், “இப்போது நாங்கள் இங்கு சுமார் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் மூலம் சோதனை நடத்தி வருகிறோம். 2 ஆண்டு ஆய்வில் இங்கு வர்த்தக ரீதியாக தங்கத்தை வெட்டி எடுப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். நாங்கள் கடந்த டிசம்பர் மாதமே பணிகளை தொடங்க விரும்பினோம். ஆனால், சில ஆய்வு முடிவுகள் வர தாமதமானது” என்றார். இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் இப்போது ஜொன்னகிரியில் தான் அமைகிறது. 

இதுகுறித்து ஆந்திர அரசு இன்று பொதுமக்களிடையே கருத்துகளை கேட்க உள்ளது. அதன்பின் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும். அனுமதி கிடைத்தவுடன் 3 மாதங்களுக்குள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். 

இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X