2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

உக்ரேனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் கண்ணீர்

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“போர் சூழல் எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது” என, உக்ரேனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் தெரிவித்தனர்.

உக்ரேன் - ரஷ்யா போரால், பிற நாடுகளை சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 43 மாணவர்கள், நேற்று முன்தினம் (01) சென்னை வந்தடைந்தனர். 

மாணவர்கள் கூறியதாவது: “வேறு வழியின்றி படிப்பை பாதியில் நிறுத்தி இங்கு வந்து விட்டோம். நிலைமை சீரானதும், மீண்டும் படிப்பை தொடர்வோம்.

எங்களை மீட்டு வருவதில், மத்திய அரசு மிகுந்த அக்கறை காட்டியது. புதுடெல்லி வந்திறங்கிய பின், தமிழக அரசு சென்னைக்கு அழைத்து வந்து, சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது. உக்ரேனின் மேற்கு பகுதியில் உள்ள நாங்கள் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டோம்.

ஆனால், கிழக்கு பகுதியில் உள்ள மாணவர்கள் மிகுந்த கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அவர்களை மத்திய அரசு விரைவாக மீட்டு இந்தியா அழைத்து வர வேண்டும்” என அவர்கள் கூறினர்.

திருவண்ணாமலை, எஸ்.வி.நகரம் கிராமத்தில் வசிக்கும் நெசவு தொழிலாளியின் மகள் தீபலட்சுமியும் வீடு திரும்பியுள்ளார். மாணவி தீபலட்சுமி கூறும்போது, “உக்ரேன் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள், உணவின்றி அவதிப்படுகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

இதேவேளை, உக்ரேனில் சிக்கி உள்ள அனைத்து இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என விமானப்படை துணைத்தளபதி ஏர் மார்ஷல் சந்தீப் சிங் கூறியுள்ளார்.

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க மூன்று விமானப்படை விமானங்கள் சென்றுள்ளன. 24 மணி நேரமும் மீட்பு பணி நடக்கும். ஒரு விமானத்தில் 200 பேர் வரை அழைத்து வரப்படுவார்கள். நமது மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்கள் என உறுதி கூறுகிறேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .