2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கண்ணைக் கட்டி காசு பறித்த ‘கலை’ குடும்பம்

Editorial   / 2024 நவம்பர் 26 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேனியைச் சேர்ந்த கலையரசனும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பிரகாவும் நாட்டுப்புறக் கலைஞர்கள். சோஷியல் மீடியா மூலம் பிரகாவுக்கு அறிமுகமான கலையரசன், அப்படியே அவரைக் காதலித்து 2019-ல் திருமணம் செய்து கொண்டார். ​திரு​மணத்துக்குப் பிறகு இருவரும் கூட்டாக ஒரு யூ டியூப் சேனலைத் தொடங்கி அதில் நாட்டுப்புற கலைகள் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், திடீரென ஒருநாள் செயற்கையாக ஜடை எல்லாம் பின்னிக் கொண்டு உடல் மொழியை மாற்றிக் கொண்ட கலையரசன், தன்னைத்தானே அகோரி என பிரகடனம் செய்து கொண்டார். அந்த அவதாரத்தை நம்பவைப்​ப​தற்காக அவ்வப்போது காசி உட்பட பல்வேறு பகுதி​களுக்கும் சென்று வர ஆரம்பித்​தார்.

அகோரி ஆனதும்(!), “7 வயதில் எனக்கு 3-வது கண் திறந்தது. சிவனையும், காளியையும் நேரில் பார்த்​தேன். பங்காரு அடிகளார், விஜயகாந்த் மரணம் எல்லாம் எனக்கு முன்பே தெரியும். ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவரது பிறப்பு முதல் இறப்பு வரை சொல்லி​விடு​வேன். தண்ணீரில் நடப்பேன், காற்றில் பறப்பேன்” என்றெல்லாம் கதைகளை எடுத்து​விட்டு சோஷியல் மீடியாவில் புது ரூட்டில் ட்ரெண்ட்​டானார் கலையரசன்.

அந்த பிரபல்​யத்தைப் பயன்படுத்திக் கொண்டு, திருமுல்​லை​வாயிலில் ஒரு கோயிலை எழுப்பி அங்கே உட்கார்ந்து அருள்​வாக்கும் ‘அளக்க’ ஆரம்பித்​தார். இதையும் அவரது மனைவி சோஷியல் மீடியாவில் வைரலாக்​கி​னார். அருள்​வாக்கு கேட்க வந்தவர்கள் அள்ளிக் கொடுத்​ததால் வளம் கொழித்தார் கலையரசன். இதனிடையே, “மனைவி, மக்களுடன் இல்லறத்தில் இருக்கும் இவர் எப்படி அகோரியாக முடியும்?” என சிலர் விமர்​சனங்களை வீசினார்கள். அதையும் இந்தத் தம்பதி அழகாக சமாளித்தது.

இந்நிலை​யில், எதிர்​பாராத ட்விஸ்ட்டாக தம்பதிக்​குள்ளேயே தகராறு முட்டிக் கொண்டு தனியாக பிரிந்​தனர். “நான் ஆன்மிக வழியில் வாழ விரும்பினேன். ஆனால், எனது மனைவி ஆடம்பரமாக வாழ்வதற்காக சட்டவிரோதமாக பணம் சம்பா​திக்கச் சொன்னார். முடியாது என்று சொன்னதற்கு அவரது குடும்பத்​தினர் என்னை அடித்து துன்புறுத்திக் கொடுமைப்​படுத்​தி​னார்கள். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு கொடுங்க பாஸ்” என்று கலையரசன் ஓட்டேரி பொலிஸில் முறையிட்​டார்.

பதிலுக்கு அவரது ஆதர்ச மனைவி பிரகா​வும், “கலையரசன் கோயிலுக்கு பூஜைக்கு வரும் பெண்களுடன் தவறான உறவில் இருந்தார். சாமியார் என ஊரை ஏமாற்றுகிறார். அகோரி என போலி வேஷம் போட்டுக்​கொண்டு ஏமாற்றி பணம் சம்பா​திக்​கிறார். அவரால் நிறைய பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது” என எதிர்​பார்க்காத ஏவுகணைகளை எடுத்து வீசினார்.

இருதரப்புமே புகார்களை எடுத்து நீட்டி​னாலும் இருவருமே பிரிந்து வாழ முடிவெடுத்து​விட்​டதால் இதில் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என போலீஸ் ஒதுங்கிக் கொண்டு விட்டது. ஆனால், மாந்திரீக மோசடி, கோயிலுக்கு வந்த பெண்களிடம் கூடா உறவில் இருந்தது, தவறான வழியில் பணம் சம்பா​தித்தது என இவர்கள் இருவரும் மாறி ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பதை பொலிஸ் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் என கேள்வி எழுப்​பு​கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X