A.K.M. Ramzy / 2020 நவம்பர் 18 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
காங்கிரஸ் குறித்து, ஊடகங்களில் விமர்சித்து வரும் கட்சி நிர்வாகிகளை, சந்தேகப் பேர்வழிகள் என்றும் திடீர் பதற்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் விமர்சித்துள்ளார்.
பிஹார் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகித்த மெகா கூட்டணி தோல்வி அடைந்தது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று முன்தினம் பேட்டியளித்துள்ளார்.
அதில், காங்கிரஸ் தலைமையை கடுமையாக அவர் விமர்சித்திருந்தார். இது காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கபில் சிபலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவரது பெயரை குறிப்பிடாமல் அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து வருவது உண்மைதான். காங்கிரஸ் முன்னெடுக்கும் தாராளவாத கொள்கைக்கு எதிரான மக்களின் மனநிலைகூட, இந்த தேர்தல் தோல்விகளுக்கு காரணமாக இருக்கலாம்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு நீண்டகால போராட்டத்தை நடத்த வேண்டியது அவசியம். காங்கிரஸை சுயபரிசோதனை செய்ய வேண்டும் எனபொதுவெளியில் கூறி வருபவர்கள், முதலில் தங்களிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்,கட்சியும் தாமாகவே சரியாகிவிடும்.
ஒரு கட்சியின் உள் விவகாரத்தை ஊடகங்களில் எழுப்பு வது மிகவும் தவறான செயல் ஆகும். சந்தேகப் பேர்வழிகளும் திடீர் பதற்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களும் தான் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .