2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி

Freelancer   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் பதவியை இராஜினாமாச் செய்த நவ்ஜோத் சிங் சித்துவின் நடவடிக்கையால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதுடன், இராஜினாமாவையும் ஏற்க மறுத்துள்ளது.  

சிறிது காத்திருங்கள், அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்த போதும் மேலிடத்தின் உத்தரவுகளை சித்து மதிக்காமல் இராஜினாமா முடிவில் பிடிவாதமாக இருந்தால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கட்சி தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும், சித்துவுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல் முற்றியதையடுத்து, காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். சித்து தலைவராக நியமிக்கப்பட்ட சில வாரங்களில் முதல்வர் பதவியை அமரிந்தர் சிங் இராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தெரிவு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றபோது, பாஜகவில் இணையப் போவதாகவும், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், இதை அமரிந்தர் சிங் வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

இந்தப் பரபரப்பான சூழலில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் பதவி விலகி, சோனியா காந்திக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.
  
புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சித்துவுக்கு நெருக்கமானவராக இருந்தபோதிலும், பஞ்சாப் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட சில முடிவுகளில் சித்துவிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சித்து விலகியமை, மாநில காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிக்கலை மேலும் ஆழமாக்கியுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் இதுபோன்ற உட்கட்சிக் குழப்பங்கள் கட்சியின் வெற்றியைப் பாதிக்கும் என்றும் மேலிடம் கருதுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .