A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சின்னத்திரை நடிகை சித்ராவின் கன்னத்தில் காயம் இருப்பது குறித்து அவருடைய தந்தை பதில் அளித்துள்ளார்.
"தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சித்ரா (29). ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஹேமந்த் (32) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் நடைபெற்றது.
சித்ரா நடித்து வரும் தொடரின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திரைப்பட நகரில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதற்காக அவர், தனது கணவர் ஹேமந்துடன் அந்த திரைப்பட நகரின் அருகே பழஞ்சூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார்.
சித்ரா, படப்பிடிப்பு முடிந்து புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். அப்போது குளிக்கச் செல்வதாக சித்ரா கூறியுள்ளார். உடனே ஹேமந்த் அந்த அறையை விட்டு வெளியே வந்து நின்றாராம். ஆனால், வெகுநேரமாகியும் சித்ரா அறைக் கதவை திறக்காததால் ஹேமந்துக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர், அறைக் கதவை தட்டினார். அதன் பின்னரும் அறைக் கதவு திறக்கப்படவில்லை. உடனே அவர், ஹோட்டல் ஊழியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஹோட்டல் ஊழியர் கணேசனும், ஹேமந்தும் மாற்று சாவியின் மூலம் கதவை திறந்து, அறைக்குள் சென்றனர். அப்போது அங்கு சித்ரா, சேலையில் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே ஹோட்டல் நிர்வாகத்தினர், நசரத்பேட்டை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சித்ராவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். சித்ராவின் பிரேதப் பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் சித்ராவின் தந்தை காமராஜ் கூறியதாவது: சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. படப்பிடிப்பை முடித்து வீட்டுக்கு வர தாமதமாகி விடும் என்பதால் விடுதியில் நேற்று மட்டும் தங்கினார். விசாரணையில் தெரிய வரும்.
சண்டை வந்து சித்ரா எங்களுக்கு போன் செய்தார் என்பது போல எல்லாம் எதுவும் நடைபெறவில்லை.
சித்ராவுக்குப் பதிவுத் திருமணம் முடிந்துவிட்டது. பெப்ரவரி 10ஆம் திகதி அன்று பெரியவர்கள் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் செய்யவிருந் தோம்.
(சித்ராவின் கன்னத்தில் காயம் இருக்கிறதாகச் சொல்கிறார்களே என்கிற கேள்விக்கு) காயம் உள்ளது. தூக்கு மாட்டியதால் உண்டான காயம் அது. வேறொன்றும் இல்லை.
குடும்பத்திலும் சின்னத்திரையிலும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாக சித்ரா எங்களிடம் சொல்லவில்லை. தற்கொலை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொலிஸில் புகார் அளித்துள்ளேன். யார் மீதும் சந்தேகம் இருப்பதாகப் புகாரில் நாங்கள் குறிப்பிடவில்லை என்றார்.
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago