2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலையேறும் பயிற்சியில் அசத்தும் மழலை

Editorial   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ஊரடங்கு, பல குழந்தைகளிடத்தில் கூடுதல் திறமைகளை வளர்த்திருக்கிறது. பாடப்படிப்போடு, இதர பல கலைகளை பயின்றுள்ளனர். தற்காப்பு கலை, இயல்-இசை-நாடக கலை, சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சிகள்.... என தங்களுக்கு பிடித்தவற்றை, கொரோனா பொதுமுடக்க காலங்களில் ஆர்வத்தோடு பயின்றுள்ளனர்.

அந்தவகையில், சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 5 வயது ஷாந்தினி, வித்தியாசமான பயிற்சி பெற்றிருக்கிறார். ஆம்...! 5 வயதிலேயே மலையேறி, இறங்கும் மலையேற்ற பயிற்சிகளை முடித்திருக்கிறார்.

 

‘‘நான் யூ.கே.ஜி. படிக்கிறேன். கொரோனா ஊரடங்கில், புதுமையான திறமைகளை வளர்த்து கொள்ள, ஆர்வமாய் இருந்தேன். அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். டி.வி.யில் பார்க்கும், புதுமையான விஷயங்களை பற்றி அம்மாவிடம் விளக்கம் கேட்க, அவரும் பொறுமையாக விளக்கம் அளிப்பார்.

அதோடு நான் ஆர்வம் காட்டும் கலை பயிற்சிகளுக்கு என்னை அனுப்பி வைத்தார். அப்படிதான் மலையேறி பழகினேன்’’ என்று மழலை மொழியில் பேசும் ஷாந்தினியை, சென்னையை சுற்றியிருக்கும் மலைப்பகுதிகளில் நடத்தப்படும் மலையேற்ற பயிற்சிகளில் காணமுடியும்.

பிஞ்சு உடலில் பாதுகாப்பு உபகரணங்களை கட்டிக்கொண்டு, கயிற்றை கையில் பிடித்துக்கொண்டு, பயிற்சியாளரின் துணையோடு, மலையேற்ற பயிற்சி பெற்றிருக்கிறார்.

‘‘வழக்கமான குழந்தைகளை போலவே, இவளது திறமைகளை வளர்த்தெடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் ஷாந்தினி மலையேற்ற பயிற்சி பெற்றது, ரொம்பவும் தற்செயலாக நடந்தது. சென்னை முடிச்சூர் பகுதியில் நடந்த மலையேற்ற பயிற்சி வகுப்புகளை காண, ஷாந்தினியை அழைத்து சென்றிருந்தேன்.

பயமின்றி, பயிற்சியில் இறங்கினாள். பயிற்சியாளர்களே அசந்துபோகும் வகையில், தைரியமாக மலை உச்சியில் இருந்து இறங்கி, அசத்தினாள்’’ என்று ஷாந்தினியின் மலையேற்ற பயிற்சி ஆர்வத்தை விளக்கினார், அவரது அம்மா அருணா. அதோடு, அவரது தொடர் பயிற்சி அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘ஷாந்தினி, சிலம்பம் பயிற்சி பெற்றிருக்கிறாள். சிலம்பம் சுற்றிக் கொண்டே திருக்குறள் சொல்லும் பயிற்சியும் பெறுகிறாள். ஆனால் மலையேற்ற பயிற்சி, அவளுக்கு ஸ்பெஷலான ஒன்று. ஒவ்வொரு மலையேற்ற பயிற்சியின்போதும், புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டு, அனைவரையும் அசத்துகிறாள்’’ என்றவர்,

ஊரடங்கு தளர்வுகள் முழுமை பெற்றவுடன், தமிழ்நாட்டின் பிரபல மலையேற்ற தளங்களில் ஷாந்தினியை பார்க்கமுடியும் என்றும், குறைந்த வயதிலேயே உயரமான மலை உச்சியை அடைந்து சாதனை புரிய அவள் ஆவலாய் இருப்பதாகவும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .