2025 மே 03, சனிக்கிழமை

மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை

Editorial   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரங்கிமலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்.13ம் திகதி, ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றினார். இத்தம்பதியின் மூத்த மகள் சத்யா (20), தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (31) என்பவரைக் காதலித்து வந்தார்.

இந்நிலையில், பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீரென்று காதலை கைவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022-ம் ஆண்டு அக்.13-ம் திகதி கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, அந்த வழியாக வந்த ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்தார். இது தொடர்பாக சிபிசிஐடி பொலிஸார் விசாரணை நடத்தி சதீஷை கைது செய்து, அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்தது.

பொலிஸார் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜராகி, 'சதீஷ் மீதான குற்றச்சாட்டு கடுமையானது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினார். அரசு தரப்பு சாட்சிகள் 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் டிச.27-ம் திகதி சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் சதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. எனவே, அவரை குற்றவாளி என அறிவிக்கிறேன். தண்டனை விவரம் 30-ம் திகதி தெரிவிக்கப்படும். அன்றைய தினம் சதீஷை மீண்டும் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று (30) தீர்ப்பளித்த நீதிபதி ஸ்ரீதேவி, மாணவியை கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனையும், மாணவியை சித்ரவதை செய்ததாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளில் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை இருப்பதால், அதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X