2025 மே 02, வெள்ளிக்கிழமை

வக்பு வாரிய மசோதா: வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு

Freelancer   / 2025 ஜனவரி 28 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாக நாளை (29) அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு புதிய மசோதாவை மத்திய அரசு கடந்த ஓகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக பா.ஜனதா எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இடம்பெற்றனர்.

இந்த குழுவினர் அடிக்கடி கூடி மசோதாவை ஆய்வு செய்து வந்தனர். மேலும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு பதிவு செய்தனர். பின்னர் அவற்றின் அடிப்படையில் பல்வேறு திருத்தங்களை கூட்டுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி 572 திருத்தங்களை கூட்டுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். அந்த பட்டியல் நேற்று முன்தினம் (26) வெளியிடப்பட்டது. இதில் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமே திருத்தங்களை கூறியிருந்தனர். அதேநேரம் பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் யாரும் எந்த திருத்தமும் கூறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று (27) மீண்டும் கூடியது. இதில் மசோதாவின் ஒவ்வொரு பிரிவாக ஆய்வு செய்யப்பட்டதுடன், திருத்தங்களும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் மசோதா மீது பா.ஜனதா உறுப்பினர்கள் கூறிய திருத்தங்களை நாடாளுமன்றக்குழு ஏற்றுக்கொண்டது. இதில் முக்கிய திருத்தமாக, தற்போதுள்ள வக்பு சொத்துகளை 'பயனாளரால் வக்பு' என்ற அடிப்படையில் கேள்வி கேட்க முடியாது என்ற விதி மத்திய அரசின் மசோதாவில் இருந்தது. ஆனால் சொத்துகள் மத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால் அது தவிர்க்கப்படும் என திருத்தம் போடப்பட்டுள்ளது.

அதேநேரம் தற்போதைய வக்பு சொத்துகளை பதிவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல ஒரு சொத்து வக்பு சொத்தா இல்லையா என்பதை கலெக்டரே தீர்மானிக்கலாம் என கூறப்பட்டிருந்ததற்கு பதிலாக, கலெக்டருக்கு மேல் அதிகாரம் கொண்ட ஒரு சிறப்பு அதிகாரியை மாநில அரசு நியமித்து சர்ச்சைகளை தீர்க்கலாம் என திருத்தப்பட்டு உள்ளது. இவை உள்பட பா.ஜனதா எம்.பி.க்களின் திருத்தங்களை ஏற்றுக்கொண்டுள்ள கூட்டுக்குழு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்த திருத்தங்களை ஏற்கவில்லை.

இதனை தொடர்ந்து வக்பு வாரிய திருத்த மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் போடப்பட்டு உள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு நாளை (புதன்கிழமை) அறிக்கை தாக்கல் செய்யும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரம் இந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31ஆம் திகதி தொடங்கும் நிலையில், இந்த தொடரின் முதல் பகுதியிலேயே இந்த மசோதா நிறைவேற்றப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஆளும் கட்சியின் திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X