2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

இப்போதைக்குத் தப்பித்தார் மே

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் தெரேசா மே மீது காணப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில், அவரது சிரேஷ்ட அமைச்சர்களினதும் ஐரோப்பிய நாடுகளினதும் ஆதரவைப் பெற்றுக் கொண்டதன் மூலம், அவர் மீதான அழுத்தங்களிலிருந்து இப்போதைக்குத் தப்பித்துக் கொண்டார் எனக் கருதப்படுகிறது.

ஐ.இராச்சிய அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர்களாக இருந்த பொரிஸ் ஜோன்சன் (வெளிநாட்டு அமைச்சர்), டேவிட் டேவிஸ் (பிரெக்சிற் அமைச்சர்) ஆகியோரோடு, கனிஷ்ட அமைச்சர்கள் 4 பேரும், பிரதமரின் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐ.இராச்சியம் விலகுதல்) தொடர்பான திட்டத்தை எதிர்த்து, தங்கள் பதவிகளிலிருந்து விலகியிருந்த நிலையிலேயே, பிரதமர் மீது அழுத்தங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில், இதன் பின்னணியிலான அமைச்சரவைக் கூட்டம், ஐ.இராச்சிய நேரப்படி நேற்று முன்தினம் இடம்பெற்றது. அதன்போது, அமைச்சரவையின் ஆதரவை, பிரதமர் மே பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் டேவிட் கோகே, “பிரதமருக்கு அமைச்சரவை ஆதரவு அளிக்கிறது என்பதோடு, ஒரே குரலில் உரையாடுகிறது என்பது, சரியான விடயமென நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் மே, “பயன்தரக்கூடிய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. முக்கியமான வாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இலண்டனுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜேர்மன் சான்செலர் அங்கெலா மேர்க்கெலுடன் ஊடகச் சந்திப்பொன்றையும், பிரதமர் மே நடத்தினார்.

இதன்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிட்டார் என்ற விமர்சனத்தை, பிரதமர் மே நிராகரித்தார். தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பேரம்பேசல் திட்டம், பிரெக்சிற் தொடர்பாக ஐ.இராச்சிய மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அங்கெலா மேர்க்கெல், இதன்போது தனத ஆதரவை, பிரதமர் மே-க்கு வழங்கினார். ஐ.இராச்சியத்தின் திட்டத்துக்கான பதிலை, ஐரோப்பிய நாடுகள் இணைந்து வெளியிடுமெனக் குறிப்பிட்ட அவர், எனினும், திட்டமொன்று தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பானது என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X