2025 நவம்பர் 05, புதன்கிழமை

’உண்மையை விளக்கவும்’ ராகுல் காந்தியிடம் கோரிக்கை

Editorial   / 2019 மே 01 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதிய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி வழங்கிய முறைப்பாடொன்றின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை, அவரது பிரஜாவுரிமை தொடர்பான உண்மை நிலையை வழங்குமாறு அவரை இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சு வினவியுள்ளது.

ராகுல் காந்தி பணிப்பாளராகவுள்ள பிரித்தானிய நிறுவனமான பெக்கொப்ஸ் லிமிட்டட் நிறுவனம் தொடர்பான ஆவணங்களில் ராகுல் காந்தியின் பிரஜாவுரிமை பிரித்தானியர் என்று அவர் பிரகடனப்படுத்தியிருந்ததாக சுப்ரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டுகின்றார்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ராகுல் காந்தி பணிப்பாளராகவுள்ள பக்கொப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 10.10.2005, 31.10.2006இல் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் வரவு செலவு அறிக்கையில், உங்களின் பிறந்த தேதி 19.06.1970 எனக் கூறப்பட்டுள்ளது. பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் எனக் கூறப்பட்டுள்ளது. 17.02.2009இல் அந்த நிறுவனத்தை கலைக்க அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பத்திலும், உங்களது குடியுரிமை பிரித்தானியர் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், இக்கடிதம் கிடைத்த பின் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பிரஜாவுரிமைக்கான பணிப்பாளர் பி.சி. ஜோஷி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பிரித்தானியப் பிரஜை என கடந்த 2015 ஆண்டு முதல் பல முறை சுப்ரமணியன் சுவாமி கூறி வருகிறார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, சுப்ரமணியன் சுவாமி தலைவர் நாட்டை தவறாக வழிநடத்தி வருவதாகவும் உரிய ஆவணங்களுடன் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இந்தியர் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர், இங்கு பிறந்து வளர்ந்தது அனைவருக்கும் தெரியும் என்றார்.

இதேவேளை, கருத்துத் தெரிவித்த காங்கிரஸின் பேச்சாளர் சஞ்சய் ஜா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கு தோல்விப் பயம் காரணமாக குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்து இருப்பதால், அதன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வழக்கமாக பின்பற்றப்படும் நடவடிக்கை” என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X