2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஐ.அமெரிக்கக் குழு வடகொரியாவுக்கு விரைவு

Editorial   / 2018 மே 29 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பான திட்டமிடல்களை மேற்கொள்வதற்காக, ஐ.அமெரிக்கக் குழுவொன்று வடகொரியாவுக்குச் சென்றுள்ளது என, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி, சிங்கப்பூரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டிருந்த இச்சந்திப்பு இடம்பெறாது என, ஐ.அமெரிக்க ஜனாதிபதி, ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அவரும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும், இச்சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதற்காக சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே, இது தொடர்பாக ஆராய்வதற்காக, வடகொரிய - தென்கொரிய இராணுவ சூனியப் பிரதேசத்தில் அமைந்துள்ள சமாதானக் கிராமத்துக்கு நேற்று முன்தினம் (27) சென்ற ஐ.அமெரிக்க அதிகாரிகள் குழு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர், வடகொரியாவுக்குள் அக்குழு சென்றுள்ளது..

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “கிம் ஜொங்-உன்னுக்கும் எனக்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக, எங்களது ஐ.அமெரிக்கக் குழுவொன்று, வடகொரியாவுக்குச் சென்றுள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “அதிகமான பிரகாசமான வாய்ப்புகளை வடகொரியா கொண்டுள்ளது என்றும், அற்புதமான பொருளாதார, நிதியியல் நாடாக அது ஒரு நாளில் மாறுமெனவும் நான் உண்மையாக நம்புகிறேன். கிம் ஜொங்-உன்னும், என்னுடன் கருத்தொற்றுமையில் இருக்கிறார். அது நடக்கும்” என்று குறிப்பிட்டார்.

இச்சந்திப்பு நடைபெறுமா, நடைபெறாதா என்பதில், இன்னமும் சந்தேகம் நிலவுகின்ற நிலையில், இரு நாடுகளுமே தற்போது நடக்குமென்ற வகையிலான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளமை, அச்சந்திப்பு நடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன எனக் கருதப்படுகிறது.

இதேவேளை, இரு நாடுகளும் சிங்கப்பூரில் சந்திக்கும் போது, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னும், அச்சந்திப்பில் கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. இச்சந்திப்புத் தொடர்பாகக் காணப்படும் ஆயத்த நிலையின் அடிப்படையில், அவர் கலந்துகொள்வது தீர்மானிக்கப்படுமென, தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X