2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்களில் ரஷ்யப் படையினரும் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 மே 29 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் ஆயுததாரிகளால், கிழக்கு சிரியாவில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான படைகளில், ரஷ்யப் படையினரும் உள்ளடங்குகின்றனர் என, நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமது குடியரசு கடந்தாண்டு தகர்ந்த பின்னர், சிரியாவின் கிழக்கு எல்லை வரை நீண்டுள்ள பரந்த பாலைவனத்திலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு பெரும்பாலாகக் காணப்படுகின்றது.  

இந்நிலையில், குறித்த பகுதிகளிலுள்ள அரசாங்கத்தின் நிலைகள் மீதான கெரில்லா முறையிலான தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு அதிகரித்ததென, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  

அந்தவகையிலேயே, கிழக்கு மாகாணமான டெய்ர் எஸ்ஸோரிலுள்ள மயாடீன் நகரத்துக்கருகேயுள்ள சிரிய, ரஷ்யப் படையினர் குழுவொன்றை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு இலக்கு வைத்தமை, மோசமாக இருந்துள்ளது.  

குறைந்தது ஒன்பது ரஷ்யர்கள் உட்பட அரசாங்கத்துக்கு ஆதரவான படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர் எனவும், சில ரஷ்யர்கள் அரசாங்கப் படையினர் எனவும், ஆனால் அனைவருமல்ல எனக் கூறிய மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான், சிரியப் படையினர் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.  

இந்நிலையில், டெய்ர் எஸ்ஸோரில் இடம்பெற்ற மோதல்களில் தமது படையினர் நால்வர் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது. இருவர், சிரிய ஆட்லறி நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த இராணுவ ஆலோசகர்கள் எனவும், அவர்கள் உடனடியாக இறந்ததாகவும், மேலுமிருவர் காயங்கள் காரணமாக, சிரியாவிலுள்ள ரஷ்யாவால் நடாத்தப்படும் இராணுவ வைத்தியசாலையில் இறந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எவ்வாறெனினும், எப்போது, எங்கு குறித்த சம்பவம் இடம்பெற்றதென்றோ, அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் பங்கெடுத்திருந்தது என்றோ ரஷ்யா குறிப்பிட்டிருக்கவில்லை.  

இந்நிலையில், குறித்த மோதல்களில் 43 ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யப் பாதுகாப்பமைச்சு தெரிவித்திருந்தது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X