2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘ஐ.நா அறிக்கையோடு ஒத்துப் போகிறது ஐ.அமெரிக்க அறிக்கை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவுகள், அதே விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவுகளோடு ஒத்துப் போகின்றன என, ஐ.நாவுக்கான ஐ.அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய அவர், “இடம்பெற்ற கடினமான உண்மையை, இவ்வுலகம் இனிமேலும் தவிர்க்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

நிக்கி ஹேலியின் இக்கருத்துகள், முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், ராக்கைனில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்த ஐ.நா அறிக்கை, இனவழிப்பு நோக்கத்தை வெளிப்படுத்தினர் எனத் தெரிவித்து, மியான்மாரின் இராணுவப் பிரதானி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகள் 6 பேர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், அவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாயின், ஐ.அமெரிக்காவின் ஆதரவு முக்கியமானதெனக் கருதப்படும் நிலையில், தமது முடிவுகளும் ஐ.நா முடிவுகளோடு இணைந்ததாக இருக்கின்றனவென நிக்கி ஹேலி கூறியமை, பொறுப்புக்கூறல் பொறிமுறையை இலகுவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தனதுரையில், தமது அறிக்கை தொடர்பான விவரங்களையும், ஹேலி வெளிப்படுத்தினார். இதன்படி, றோகிஞ்சா முஸ்லிம்களில் எழுந்தமானமாகத் தெரிவுசெய்யப்பட்ட 1,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில், ஐந்திலொரு பேர், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்படுவதை அல்லது காயமடைவதை நேரில் கண்டனம் எனத் தெரிவித்துள்ளனர். கருத்துகளை வழங்கியோரில் 82 சதவீதத்தினர், ஒரு கொலையையேனும் பார்த்திருந்தனர் எனவும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், பாலியல் வன்முறையைக் கண்டிருந்தனர் எனவும், 45 சதவீதத்தினர், வன்புணர்வைக் கண்டிருந்தனர் எனவும், ஹேலி குறிப்பிட்டார்.

“இக்குற்றங்களில் பெரும்பாலானவற்றைச் செய்தவர்களாக, ஒரு குழுவையே எமது அறிக்கை அடையாளங்காட்டுகிறது: மியான்மாரின் இராணுவமும் பாதுகாப்புப் படைகளும் அவர்கள்” என, நிக்கி ஹேலி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X