2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

’குடியேறிகளே வெளியேறுங்கள்’ : லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?

Editorial   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். அப்போது பேரணியில் பங்கேற்ற ஒரு குழுவினர் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த பேரணி லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு ஆதரவு அளித்து, அதில் பங்கேற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், அவர்கள் தேசிய அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் டாமி ராபின்சனின் பேரணிக்கு எதிராக ‘பாசிசத்துக்கு எதிரான பேரணி’ என்ற போராட்டத்தை இனவெறிக்கு எதிரானவர்கள் மேற்கொண்டனர். இதில் சுமார் 5,000 பேர் பங்கேற்றனர். தங்களது பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை வலதுசாரி ஆதரவாளர்கள் நெருங்காத வகையில் பொலிஸார் தடுக்க முயன்றபோது மோதல் வெடித்தது. அப்போது பொலிஸார் மீது தாக்குதல் நடந்துள்ளது. போலீஸாரை நோக்கி பாட்டில்களும் எறியப்பட்டுள்ளன.

 

அதன் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸாருக்கு தலைக்கவசம் மற்றும் கவச உடைகள் வழங்கப்பட்டன. இதை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு பேரணியின் போது அத்துமீறி செயல்பட்டவர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

பிரிட்டனில் செல்வாக்கு பெற்ற தீவிர வலதுசாரி செயல்பாட்டாளராக டாமி ராபின்சன் அறியப்படுகிறார். இவர், தேசியவாத மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு இங்கிலிஷ் டிபேன்ஸ் லீக்கை நிறுவி உள்ளார். ஐரோப்பா முழுவதும் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடியேறிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து பரவலாக பேசி வருகின்றனர். அதை முன்னிறுத்தி டாமி ராபின்சனின் போராட்டம் அமைந்தது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அரசியல்வாதியும், வலதுசாரி ஆதரவாளருமான எரிக் ஜெம்மோர் கூட்டத்தினர் மத்தியில் பேசிய போது, "தெற்கிலிருந்து வரும் மக்களாலும், முஸ்லிம் கலாச்சாரத்தாலும் நமது முன்னாள் காலனிகளால் நாம் இருவரும் காலனித்துவ ஆதிக்கத்துக்கு உள்ளாகிறோம். இருவருக்கும் ஒரே பாதிப்புதான்" என்றார்.

‘பிரிட்டிஷ்காரராக இருப்பதில் ஏதோ அழகு இருக்கிறது. இப்போது இங்கு நடப்பது பிரிட்டனின் அழிவு. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குடியேற்றம் நடக்கிறது. தொடக்கத்தில் இது மெதுவாக நடந்தது. இப்போது வேகமாகி உள்ளது’ என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்தார்.

இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து படகுகள் மூலம் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைவது குறித்து பலரும் கவலை கொண்டுள்ள நிலையில் குடியேற்றத்துக்கு எதிரான போராட்டம் பரவலாகி உள்ளது. புகலிடம் தேடி வரும் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு அருகிலும் குடியேற்றத்தை எதிர்ப்பவர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .