2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

காணாமல்போன இந்தோனேசிய விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு

S.Renuka   / 2026 ஜனவரி 18 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் காணாமல் போனதாக கூறப்படும்  விமானத்தின் சிதைவுகள் சுலாவேசி மாகாணத்தில் உள்ள புலுசராங் மலையில் (Mount Bulusaraung) கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களின் செய்திகள்  தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் யோக்யகர்த்தாவிலிருந்து (Yogyakarta) சுலாவேசி தீவின் மக்காசர் (Makassar) நகருக்குச் சென்ற பட்டய விமானம் (Chartered Plane) ஒன்று சணிக்கிழமை (17) மதியம் மாயமானது.

இந்தோனேசியா எயார் டிரான்ஸ்போர்ட் (IAT) நிறுவனத்தால் இயக்கப்படும் ATR 42-500 ரக விமானம், இதில் 8 ஊழியர்கள் மற்றும் 3 பயணிகள் என மொத்தம் 11 பேர் இருந்துள்ளனர். இந்தப் பயணிகள் அந்நாட்டின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த விமானம் சணிக்கிழமை (17) மதியம் 1.17 மணியளவில் (உள்ளூர் நேரம்), மக்காசர் விமான நிலையத்தை அணுகிக் கொண்டிருந்தபோது ரேடார் தொடர்பிலிருந்து இந்த விமானம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் பணியின்போது,  தெற்கு சுலாவேசி மாகாணத்தில் உள்ள புலுசராங் மலையில் (Mount Bulusaraung) விமானத்தின் சிதைவுகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மலையேற்றப் பகுதியில் தீப்பிழம்புகள் மற்றும் விமானத்தின் லோகோ (Logo) போன்ற பாகங்களைச் சில மலையேற்றப் பயணிகள் பார்த்ததாகத் தகவல் அளித்துள்ளனர்.

தற்போது ‘பசர்னாஸ்’ (Basarnas) எனப்படும் இந்தோனேசியத் தேசியத் தேடுதல் மற்றும் மீட்பு முகமை, ஹெலிகொப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்துள்ளது.

விமானம் தரையிறங்குவதற்காகச் சரியான பாதையில் வரவில்லை என்றும், அதனைச் சரி செய்யுமாறு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை (ATC) அறிவுறுத்திய சிறிது நேரத்திலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் நிலவிய மேகமூட்டமான வானிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அப்பகுதியில் அடர்ந்த மூடுபனி மற்றும் கரடுமுரடான மலைப்பாதை இருப்பதால், மீட்புக் குழுவினர் சிதைவுகள் உள்ள இடத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உள்ளே இருந்த 11 பேரின் நிலை என்ன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X